வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (30 ஆம் திகதியுடன்) 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இது தொடர்பான சோக மீட்டல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடந்தன.
வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் இந்த முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தடங்கல்கள் குறித்து கருத்துப் பரிமாறல்களே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன.
ஆனால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்று பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததோடு யதார்த்தத்தை புட்டு வைத்திருக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும். முஸ்லிம் தலைவர்களின் ஏட்டிக்குப் போட்டியான அரசியலுக்கு மத்தியிலும் கொழும்பில் இரண்டு கூட்டங்கள் நடந்தன.
ஒன்று மு.கா. தலைவர் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நடந்தது. மற்றது அ.இ.ம. காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடந்தது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அவலங்கள் தான் இரண்டிலுமே கருப்பொருளாக இருந்தன என்பது முக்கியமான விடயம்.
என்றாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகள் பற்றித்தான் இந்தக் கூட்ட ங்களில் அழுத்தமாக கருத்துகள் ஒலித்தன.
உண்மையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு கால் நூற்றாண்டுகள் கழிந்தாலும் கடந்த கால தவறுகள், அதனால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் இருதரப்பிலும் இன்னும் மனக்குறைகளாக இருந்து வருவதுடன், ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையும் தொடர்கின்றது.
இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களாக இருந்து தமிழ், முஸ்லிம்கள் ஒரே வலியை அனுபவித்தாலும், இரு இனங்களுக்குமிடையில் நல்லிணக்கம் என்பது இருந்ததாகக் கருத முடியாது.
கொழும்பில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக் கிய அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் மற்றும் சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு யதார்த்த நிலை யைக் கூறியதோடு ஆழமான கருத்துக்களையும் முன்வைத்தனர்.
அமைச்சர்களின் உரை ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தின் பிரதிநிதி என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாள ரும் யாழ். மாவட்ட எம்.பியுமான எம்.ஏ. சுமந்திரன் ஆற்றிய உரை, இரு இனங்களின் அடிநாதத்தை அதிரவைத்திருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.
“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு அதேபோல, 2012 இல் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக முஸ்லிம் தலைமை செயற்பட்டமை காட்டிக்கொடுப்பாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்” என அந்த மேடையிலே அவர் அடித்துச் சொன்ன விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையை ஒட்டுமொத்த மாக தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்புக்கூற வேண் டும்” என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
தமிழ் பேசும் அரசியல் பிரமுகர்களில் எத்தனை பேருக்கு இந்தத்துணிவு வருமோ தெரியவில்லை. ஆனால் சுமந்திரன் சொல்ல வேண்டி யதை சொன்னார். இரு இனங்களுக்குமிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற சத்திய வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க முடிகிறது.
உண்மையில் அந்நியோன்யம் என்று கூறிக்கொண்டு இரு இனங்களும் சந்தேகக் கண்ணோடுதான் வாழ்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாமல்தான் இருக்கிறது.
இந்த நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினர். இரு இனங்களுக்கிடையிலும் அந்நியோன்யமான வாழ்நிலை இருக்கிறது. ஆனால் நல்லிணக்கமாக வாழ்கிறார்கள் என்று இதனை அர்த்தங் கொள்ள முடியாது. அந்நியோன்யம் என்பது வேறு. நல்லிணக்கம் என்பது வேறு.
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதும், தற்போது, பாதிக்கப்படுகின்ற போதும் தமிழ்த் தலைமைகளும் தமிழர்களும் அதனைக் கண்டு கொள்வதில்லை என்பது முஸ்லிம்களின் குமுறல், முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழர்களும் தமிழ்த் தலைமைகளும் அதனைப் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்ற இன்னுமொரு பெரும் கவலை.
தமிழர்கள் கொல்லப்படும் போதும், படையினரால் தாக்குதல்கள் நடத் தப்படும் போதும் முஸ்லிம்கள் கண்டுகொள்வதேயில்லை என்பது தமிழர் தரப்பு ஆதங்கம். அதேநேரம் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழர் தலைமைகள் முன்னின்று செயற்படும் போது முஸ்லிம் தலைமைகள் அதற்கெதிராகச் செயற் பட்டு காட்டிக்கொடுப்பில் ஈடுபடுகிறார்களென்பது தமிழர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இவைகளெல்லாம் இருதரப்பிலும் இருக்கின்ற ஆதங்கங்கள். சிறுபா ன்மை சமூகங்களாக இருக்கின்ற தமிழ், முஸ்லிம்கள் மத்தியில் இந்த நிலை தொடரக்கூடாது.
முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்று கேட்டால் எதற்கும் முடிவு கண்டுவிட முடியாது. இருதரப்பும் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டு வெளிப்படையாகப் பேசுவதன் மூலமே அரை மாத்திரையை முற்றுப்புள்ளியாக்கலாம். இதனைத் தான் சுமந்திரன் துணிவோடு கூறினார்.
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்த்திருந்தால் தடுத்திருக்கலாமென சுமந்திரன் பேசியிருப்பது அவரது தனிப்பட்ட உள்ளக்கிடக்கையாகவே நாம் பார்க்க முடிகிறது. அன்றைய நிலையில் தமிழர்கள் அதனை எதிர்த்துக் கிளர்ந்திருந்தால் துப்பாக்கிகள்தான் பதில் சொல்லி இருக்கும்.
ஆகவே, யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு இருதரப்பும் மனம் விட்டுப் பேசினாலே அடிப்படையில் நல்லிணக்கம் ஏற்பட்டு உறவில் முன்னேற்றம் துளிர்விடும்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப் பட்டாலே யாழ். மண்ணில் கால் வைப்பேன் எனச் சூளுரைத்தவர் தமிழர் தலைவர் மு. சிவசிதம்பரம். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மு.கா. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் தலைமையில் நடந்த கூட்டமொன்றில் பெருந்திரளான மக்கள் மத்தியில் இவ்வாறு பேசிய சிவசிதம்பரம், இறுதி மூச்சுவரை வடக்கு மண்ணில் கால்பதிக்கவில்லை. அவரது சடலமே யாழ். சென்றது.
இவ்வாறு மனிதாபிமானத்திலும் கொண்ட கொள்கையிலும் உறுதியான தமிழ்த் தலைமைகள் இருந்தன என்பதை இருதரப்பும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கு முகவரி கொடுத்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப். இருதரப்பு நல்லிணக்கத்துக்காகக் கடுமையாக உழைத்த வர். பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போதெல்லாம், முஸ் லிம்களுக்காகத் தமிழர்கள் செய்த அர்ப்பணிப்பை கூறுவத ற்குத் தயங்கவில்லை. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும்.
இருதரப்பு தலைமைகளும் மனந்திறந்து பேசினால், நல்லிணக்க தடைகள் தானாகவே அகன்று விடும்.

கருத்துரையிடுக

 
Top