சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி அஷ்செய்க் ஜலால்தீன்


(பி.எம்.எம்.ஏ.காதர்)

“அண்மையில் காலஞ்சென்ற அறிஞரும்,பன்னூல் ஆசிரியரும் சிறந்த நிர்வாகியுமான அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல், கிழக்கிலங்கை தந்த மிகச் சிறந்த ஆய்வாளரும்,பேச்சாளரும்,மனிதப் பண்புகளை அணிகலனாகக் கொண்டவருமாவார்.என தென்கிழக்குப் பல்கலைக்கழக ,சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி. எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற இலங்கை முஸ்லிம் அறிஞரும், பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம். ஜமீல் அவர்களின் நினைவு  தின உரையும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் அண்மையில் இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின்  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
அங்கு அறிமுக உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஷாஹிர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உப வேந்தர் பேராசிரியர்  எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக்  கலந்துகொண்டார் . இங்கு சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி. எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-அறிஞர்  ஜெமீலுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகததிற்கும் குறிப்பாக இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்துக்கும் மிகநெருங்கிய தொடர்புண்டு. இப்பீடத்தின் வரலாறு முழுவதும் அறிஞர்  ஜெமீலின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
“நான் 2005ம் ஆண்டில் இப்பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பதவியேற்றபோது அறிஞர் ஜெமீல் அவர்களும் கலாநிதி சுக்ரி  அவர்களும் இப்பீடத்தின் வெளிவாரி  உறுப்பினர்களாக  தெரிவு செய்யப்பட்டு என்னோடு கடமையாற்றினார்கள் . அதுமட்டுமன்றி பலவருடங்கள் பலதடவை பல்கலைக்கழக மூதவை (கவுன்ஸில்) உறுப்பினராகவும் கடமையாற்றிய ஜெமீல் அவர்கள் அவர்  மரணிக்கும் போது கூட கவுன்ஸில் உறுப்பினராகக் கடமையாற்றினார் 

பீடசபை,கவு ன்ஸில் கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் மிக ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்ததோடு மிக நிதானமாகவும் பக்கச்சார்பின்றியும் கருத்துக்களை கூறி நீதிக்கும் நியாயத்துக்குமாகப் பாடுபட்டார் . சில  சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழக கவுன்ஸில் எடுக்க விருந்த பல பிழையான முடிவுகளை தன்னந்தனியாக உறுதியான கருத்துக்களோடும், ஆதாரங்களோடும் முன்வைத்து அம்முடிவுகளை தடுத்து. நீதியாக முடிவுகளை கவுன்ஸில் எடுக்கவைத்து விரிவுரையாளர்கள்  ,பல்கலைக்கழக ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தார்.
தன்னால் முடிந்தளவு  பீடத்தினதும் பல்கலைக் கழகத்தினதும்  சிறந்த செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கினார் . இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தில் மட்டுமே (இலங்கையில்) ஆரம்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கியியல் துறையின் அச்சாணியாக அறிஞர்  ஜெமீல் அவர்கள் திகழ்கின்றார்கள். இத்துறைக்கான பாடவிதானங்களை தயாரிப்பதற்கான பேராசிரியர்கள்,அறிஞர்களை தெரிவு  செய்வதிலிருந்து இதற்கான பல்வேறு கலந்துரையாடல்களை கொழும்பிலுள்ள ரண்முத்து ஹோட்டலில் ஒழுங்கு செய்வதுவரை ஜெமீல் அவர்களின்  பங்களிப்பு என்னாலோ இப்பீடத்தினாலோ பல்கலைக்கழகத்தினாலோ மறக்கப்படாது என்றும் நினைவு  கூறப்படவேண்டியதாகும். 

அறிஞர் ஜெமீல் 20 க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த ஆய்வு  நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். பலஆய்வு  நூல்களின் தொகுப்பாளராக, மேற்பார்வையாளராக, முதன்மை ஆசிரியராக விளங்குகிறார். அவர் கைபடாத துறையே இல்லை. கல்வித்துறை ,நிருவாகத்துறை, இலக்கியத்துறை,ஆய்வுத்துறை, கிராமிய கவிதைத் துறை,ஆசிரியத்துறை,சொற்பொழிவுத்துறை எனஅவர் கொடிகட்டிப் பறந்த துறைகள் நீண்டுசெல்கின்றன. 
இவ்வாறு பல்வேறு சாதனைகள் படைத்த அறிஞர் ஜெமீல் அவர்களுக்கு 2012,2013 ஆண்டுகளில் நடை பெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கவேண்டும் என இப் பல்கலைக்கழக கலைகலாசாரப் பீடம் பேரவைக்கு ஏகமானதாக சிபாரிசு செய்தது. பல்கலைக்கழக மூதவை உட்பட சகலதரப்பினரும் இதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். இருந்தபோதிலும் துரதிஷ்ட வசமாக அந்த முடிவு  மாற்றப்பட்டு வேறு ஒருவருக்கே கௌரவ கலாநிதிப் பட்டம் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.
இப்போதைய நிலையில் இந்நாட்டில் குறிப்பாக பல்கலைக்கழக  பிரதேசத்தில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கக் கூடியவர்களில் அறிஞர் ஜெமீல் அவர்களே முதன்மையானவர் என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். இப்பட்டம் அவருக்கு வழங்கப்படாமை ஒருவரலாற்றுத் தவறாகும் என்றார்.  

இந்த நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்  எம்.எஸ்.எம். அனஸ் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார் . ஜெமீல் அவர்களின்  பாரியார் சித்தி ஆரிபா  மகன் முஹம்மது நஸீல் உட்பட அவரது பெருமளவிலான உறவினர்கள், புத்திஜீவிகள்,உலமாக்கள், விரிவுரையாளர்கள்,ஊடகவியலாளாகள்,மாணவர் கள் என மண்டபம் நிறைந்து காணப்பட்டது.
இந்நிகழ்வுக்கு முன்னதாக பல்கலைக் கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூல் நிலையத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்டமர்ஹூம் ஜெமீல் அவர்களின் நூல்கள், இலக்கியத் தொகுப்புக்கள்,ஆவணங்கள், டிஜிடல் முறையிலான அவரது வாழ்க்கைக் குறிப்புக்கள் தொலைக்காட்சி உரையாடல்கள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட கண்காட்சி ஜெமீல் அவர்களது மகனால் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் எஸ்.எச்.எம்.ஜெமீல் இயற்றிப் பாடிய கிராமியக் கவிதைகளை அவருடைய குரலிலேயே ஒலிப்பதிவு  செய்யப்பட்ட ஒலிநாடா கூகுள் இணையத்தளத்தில் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களினால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top