(சப்னி)
“மக்களின் அன்றாட வாழ்வும், சகஜ வாழ்க்கையும்” திரும்புவதன் ஊடாக தமது இன,மத ரீதியிலான அபிலாசைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையின் மேலேயே இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தது. 

அதிலும் விசேடமாக சிறுபான்மை மக்களின் தெரிவாகவே இவ்வரசு இயங்கி வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் மூன்றாவது பெரும்பான்மையான முஸ்லீம்கள் மீது காட்டப்படும் நமபிக்கையூட்டக் கூடிய செயல்பாடுகள் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  இளைஞர் அமைப்பாளர் அன்வர் நெளஷாத் அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்குள் உள்ள இன முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற நோக்கோடு ஐ.நா வின் பரிந்துரைகளை எமது நாட்டின் இறைமையினை மீறாதவாறு செயட்படுத்துவதட்கான ராஜதந்திர நடவடிக்கைகளில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையானதுவுமாகும். 

கௌரவ பிரதம மந்திரி அவர்களும், கௌரவ எதிர்க்கட்சித்தலைவர் அவர்களும், இவ்விடயத்தில் ஒரே போக்கைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லீம்களை ஒரு அப்பாற்பட்ட பிரஜைகளாக கொண்ட ஒப்பந்தங்கள் இலங்கையின் இனப்பிரச்சனை வரலாற்றில் தோல்வியடைந்தமை வரலாற்று உண்மை. 

ஐக்கிய தேசியக்கட்சி அரசு ஏற்கனவே உள்நாட்டுப் போராளிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லீம்களை புறக்கணித்தே நடந்துள்ளது. இந்தப் பயத்தோடு நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடனான நல்லாட்சி அரசை நோக்க வேண்டிய பொறுப்பும் நமக்குள்ளது. 

இந்நிலையில் உள்நாட்டு குழப்பங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு முஸ்லீம்கள் அவர்களின் மீள்குடியிருப்பு, அதிகார அலகுகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய தெளிவான வரைவுகள் இன்றிய ஜெனிவா நியாய சபைகளோ, அல்லது உள்நாட்டு பொறிமுறைகளோ நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளல்ல என்பதுவும் தெளிவான உண்மையாகும். 

“கிழக்கில் நடந்த இடம் பெயர்வுகள் அண்மித்த பிரதேசங்களோடு சங்கமித்துவிட்ட நிலையில், வடக்கில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வு குறித்த நியாயங்கள், நியாயத்துக்கான குரல்கள் இந்த நேரத்தில் ஒலிக்காவிட்டால், அவை எப்போதும் ஒலிக்கவே தேவை இல்லை” என்பதே முஸ்லீம் சமூகத்தின் அடிமட்ட அங்கத்தவன் ஒவ்வொருவனதும் எதிர்பார்ப்பாகும். 

அதே நேரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கௌரவ அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் தமது நியாயமான நிலைப்பட்டையும் ஆதங்கத்தையும் இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்டிருக்கின்றமை சமூக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதுடன் முஸ்லீம் தேசிய உணர்வின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது. 

இது சில அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. சிறுபான்மை மக்களின் உண்மை நிலைப்பாட்டை ஆதரிக்கும் மன நிலையை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர் கௌரவ அமைச்சர் அமீரலி அவர்களும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மிக தைரியமாகவே வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் அரசியலின் பெரும்பான்மை சக்திகளிடம் இருந்து பெறுவதற்கு சிறுபான்மையிடம் உள்ள தேவைகள் அநேகம் இருப்பினும் தமிழ் முஸ்லீம் உறவை தனித்தனியாய் பேணுவதன் ஊடாக அவற்றில் எதையும் சாதித்து விட முடியாது என்பதுவும் வரலாறு கற்றுத்தந்த பாடமாகும். இருப்பினும் தமது அரசியல் தனி லாபத்தை கருத்திற்கொண்டு தமிழரசுக் கட்சித்தலைவர் கௌரவ எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமது எல்லா போராட்டங்களிலும் தனியே தமிழினத்தினை திருப்திப் படுத்தும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றமையும் தெளிவானதாகும். 

இதனாலேயே ஆளுமைமிக்க தமிழ் தலைமைகளையும் நாம் நிராகரிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மக்களுக்காய் முன்னிற்கும் தலைமைகளுடன் நாம் கைகோர்த்து நமது மக்களுக்காய் நாம் அணிதிரண்டு, பெறுமதிமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் அனைவரையும் அழைக்கின்றோம். 

கருத்துரையிடுக

 
Top