கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை அனுதாபம்


சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு  நல்லாட்சியை நேசிக்கும் சகல இலங்கையர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவரது வெற்றிடம் நிரப்ப முடியாத அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதாக கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் ஊடக இணைப்பாளர் அஷ்ஷெய்க்- எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா (நழீமி) தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுற்ற நிலையில் முன்னைய அரசின் எதேச்சதிகாரம்> ஊழல்> அநீதிகள் என்பனவற்றுக்கெதிராக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடாத்தும் ஆளுமைமிக்க ஒரு பௌத்த சமயத் தலைவராக சோபித தேரர்  செயற்பட்டு வந்தார். 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்திய சமாதானப்படை இலங்கை மண்ணுள் நுழைந்தமை ஒரு வகை ஆக்கிரமிப்பு என்று துணிந்து கருத்துத் தெரிவித்து தமது இயக்கத்தின் உறுப்பினரர்களையும் சிவில் மற்றும் இடதுசாரி இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தையும் தலைமை தாங்கி நடாத்தினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு> தேர்தல் முறைமையில் சீர்திருத்தம்> தேசிய நல்லிணக்க அரசாங்கம் உருவாக்கம் என்ற அவரது கொள்கைப் பிரச்சாரங்களின் விளைவுகளில் தேர்தல் சீர்திருத்தம் தவிர உள்ள ஏனையவற்றை தனது ஆயூள் முடிவதற்குள்  கண்டு கொண்டு திருப்தியடைந்தார். இதற்காக இவர் சுமார்110 சிவில் சமூக அமைப்புக்களை ஒன்று திரட்டிய பாங்கு சமகால இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய திருப்புமுனையினை ஏற்படுத்தியது. அதனது திர்வுகள் அவருக்கு அச்சுறுத்தல்களாக மாறிய போதிலும் அஞ்சா நெஞ்சத்துடன் நல்லாட்சியை வலுப்படுத்துவதில் தனது பங்களிப்பை உச்ச அளவில் மேற்கொண்டார்.

நல்லாட்சி மலர்ந்தும் கூட அதனால் எதிர்பார்க்கப்படும் அரசியல் மாற்றங்கள் வேகமாகவும்> போதியளவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை எனவும் அதிகரித்த அமைச்சரவை கூட நல்லாட்சிக்கு உகந்ததல்ல> எனவும் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி அவர் குறைபட்டுக் கொண்டார்.

ஜனவரி 08 ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யார் பொது வேட்பாளர்? என்ற சர்ச்சை நீடித்த போது யாரும் முன்வராவிட்டால் சோபித தேரர் பொது வேட்பாளராகக் களமிறங்குவார். என அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு மிகுந்த மக்கள் செல்வாக்கும்> ஜனரஞ்சகமும் கொண்ட சமய சமூகத்தலைவராக மதிக்கப்பட்டார். நல்லாட்சியைத் தோற்றுவித்த ஒரு மாமனிதர் அதனை வலுப்படுத்தி> உரமூட்டும் ஒரு கால கட்டத்தில்  மரணம் எய்திருப்பது நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதோடு> அநீதிகளுக்கு எதிரான குரல் ஓய்ந்து விட்டதா? ஏன்ற மனக்கவலையையும் சகல இலங்கையர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. பெளத்த தலைவராக இருந்தும் தமிழ் பேசும் சமூகங்களின் விவாகாரங்களில் அக்கறை செலுத்திய அவர் பௌத்த தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் ஒரு நடு நிலையான பௌத்த துறவியாக செயற்பட்டு சமதான சகவாழ்வுக்கு இதயசுத்தியுடன் குரல் கொடுத்தார்.

இவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பம்> உறவினர்கள்> அன்பர்கள்> நண்பர்கள் சமூக நீதிக்கான மக்கள் இயத்தின் உறுப்பினர்கள்> இலங்கையர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை எதிர்வரும் 12 நவம்பரில் பிரகடனப்படுத்தும் தேசிய துக்க தினத்தில் முஸ்லிம் கல்வியியலாளர்கள் பங்கேற்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றது.

கருத்துரையிடுக

 
Top