அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா அவர்கள் கடந்த 2015-09-24 ம் திகதி இவ்வுலகைவிட்டுப்பிரிந்தார்.
அன்னாரை நினைவுகூரும் நிகழ்வும் கமலதீபம் எனும் பெயரில் நினைவுமலர் வெளியிடும் நிகழ்வும்  2015-10-27 அன்று கல்முனை நால்வர் கோட்டம் மண்டபத்தில் பேரவையின் தலைவர்  ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்றது.

ஆங்கில பாட உதவிக்கல்விப் பணிப்பாளராக ஓய்வு நிலையடைந்த அமரர் கமலாம்பிகை லோகிதராஜா, கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்வி, விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறை, சமூகப்பணி, என்பவற்றில் தன்னை அர்ப்பணம் செய்ததன் காரணமாக பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் நூல் விமர்சனம் செய்வதிலும் தனது பேச்சாற்றல் மூலமும் வெளிப்படுத்தி சிறந்து விளங்கினார்.

இவரால் எழுதப்பட்ட “பத்தும் பதியமும்” எனும் நூல் பலராலும் பேசப்படும் ஒரு நூலாகும். சமாதான நீதவானாக திகழ்ந்த இவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி போன்ற உயர் அந்தஸ்த்துக்களையும் பெற்றிருந்தார்.

1930-05-12 ல் இவ்வுலகில் பாதம் பதித்த அமரர் கமலாம்பிகை கல்வி கற்ற குடும்பத்தில் பிறந்து தனது வாழ்விலும் கல்விக்காக உழைத்து பயன்படக்கூடிய பிள்ளைச் செல்வங்களையும் இவ்வுலகுக்குத் தந்து மறைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அவர் இவ்வுலகில் செய்த சேவைகளைக்கொண்டு பிராத்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் பொதுச்செயலாளரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் உதவிக்  கல்விப்பணிப்பாளருமான  வி.ரி.சகாதேவராஜா வின் நெறிப்படுதளுடன்  இடம்பெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை கலாநிதி பரந்தன் கந்தசாமி  நிகழ்த்தினார். பின்னர் நீத்தார் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றது. தலைமையுரையை தேசமான்ய ஜலீல் ஜீ நிகழ்த்திய அதேவேளை  கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் செ.யோகராஜாவும் கல்முனை உவெஸ்லி பாடசாலையின் அதிபர் வி.பிரபாகரன் மற்றும்  ஏ.ஏ.கபூர் ஆகியோர் நினைவுப் பேருரையாற்றினார்.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் வெளியீட்டுக் குழுவினால் வெளியிடப்பட்ட கமலதீபம் எனும் நினைவு மலரின் முதல் பிரதியை  பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ, அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா அவர்களின் மகள் திருமதி சுபோசனா விவேகானந்தராஜாவுக்கு வழங்கி வைத்தார். பின்னர் இங்கு நினைவுக்கவியை கலைமகள் ஹிதயா மற்றும் சுல்பிகா ஷரீப் ஆகியோரும் நினைவுப் பாடலை வீரமுனை சிசிலியா மற்றும் விஜிதா ஸ்ரீதக்சனும் பாடினர். ஏற்புரையை அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா அவர்களின் மகள் திருமதி சுபோசனா விவேகானந்தராஜா  வழங்கினார். 


கருத்துரையிடுக

 
Top