மாணவி ஹம்தா ஸீனத் சமீம் வேண்டுகோள்

(பி.எம்.எம்.ஏ.காதர்)
சிறுவர்கள் நாங்கள் வெள்ளைக் காகிதங்கள் எங்களைக் கசக்கி நீரோடைகளில் வீசாதீர்கள் எங்களைக் கொல்லாதீர்கள் எங்கள் கழுத்துக்களை இறுக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி  ஹம்தா ஸீனத் சமீம்.

சர்வதேச சிறுவர்; தினத்தையொட்டிய கல்முனை பிரதேச செயலகம் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு   மதீனா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய போதே மாணவி ஹம்தா ஸீனத் சமீம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அல்மதீனா அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எச்.முகம்மட் கனி கலந்து கொண்டார்.விஷேட அதிதியாக பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ,
சிறப்பு அதிதிகளாக திவிநெகும மகாசங்க முகாமைத்தவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, திவிநெகும திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர்,மருதமுனை திவிநெகும சமதாய அடிப்படை வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன் உள்ளிட்ட திவிநெகம உத்தியோகத்தர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு மாணவி ஹம்தா ஸீனத் சமீம் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-சிறுவர் தினம் வருடா வருடம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது இதில் சிறுவர்களை மகிழ்ச்சிப் படுத்தகின்றார்களா ? இல்லவே இல்லை மாறாக துன்பப்படுத்தவே செய்கின்றார்கள்.
ஓவ்வொரு சிறுவர்கள் மனசுக்குள்ளும் என்ன இருக்கிறது சிறுவர்களின் ஆசை என்ன என்பதை யாரும் உணர்வதே இல்லை சிறுவர் தினத்தன்று தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளைப் ஒளிபரப்புவார்கள், பத்திரிகைகளில் கட்டுரைகளைப் பிரசுரிப்பார்கள் நல்ல கவிதைகளையும் எழுதுவார்கள் சிறுவர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற அதிதிகள் சிறுவர்கள் பற்றிய தகவல்களை அழகாகச் சொல்லிவிட்டுப் போவார்கள் அத்தோடு அன்றைய சிறுவர் தினம் முடிந்து விடும்.
வீதியில் செல்வதற்குப் பயமாக இருக்கின்றது வீட்டிலே தனியாக இருக்க முடியவில்லை, தொலைக்காட்சி பார்க்கப் பயமாக இருக்கின்றது, பத்திரிகை வாசிக்க முடியவில்லை எங்கு பார்த்தாலும் சிறுவர் துஷ்பிரயோகம் கற்பழிப்பு வன்புணர்வு  என்ற செய்திகள் வர்ஷா என்றும் சீமா என்றும் வித்தியா சேயா என்ற செய்திகளையே அதிகம் காணமுடிகின்றது. 
ஆனால் நாங்கள் விரும்புவது  இதுவல்ல சிறுவர்களாகிய எங்களுக்கு  அன்பு காட்டுங்கள் எங்களை கண்ணியப்படுத்துங்கள் கௌரவப்படுத்துங்கள் அறிவுரை கூறுங்கள் ஆலோசனை வழங்குங்கள் அமைதியாய் பேசுங்கள் நாங்கள்தான் இன்றைய உலகத்தின் நாளையத் தலைவர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
இது சிறுவர்களின் உலகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது சிறுவர்களாகிய  எங்களுக்கு வன்முறை கொடுமை தொடருமானால் இந்த உலகத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டு அதன் சாவிகளைத் தொலைத்து விடுவோம்.  சிறுவர்கள் நாங்கள் வெள்ளைக் காகிதங்கள் எங்களைக் கசக்கி நீரோடைகளில் வீசாதீர்கள் எங்களை அமைதியாக வாழ விடுங்கள் என  அதிதிகளை  மனம்  உருக வைத்து பேசினார் 

கருத்துரையிடுக

 
Top