சிறுவர்களை விபத்துக்களிலிருந்து பாதுகாப்போம் - சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கட்டுரை-சிறுவர்  உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் 

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர் காலத்தை இன்றே பாதுகாப்பது நம் அனைவரதும் பொறுப்பாகும். சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களால் மட்டும் இதனை பாது காக்க முடியாது. பெற்றோர்களும் ,பாதுகாவலர்களும்  சமூகத்தில் நலன் கொண்டோர்களும் அக்கறையுடன் செயற்பட்டால் மட்டுமே சிறுவர்களை பாதுகாக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் விபத்திற்குள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகின்றது.இதற்கு பெற்றோகளின் கவனயீனமும் ,பிள்ளைகளின் அறியாத்தன்மையுமே காரணமாகவுள்ளது.  வாகனங்களில் மோதுண்டும் , நீர் நிலைகளில் குளிக்கும் போதும், மின்னல்,மின்சாரம் தாக்கியும், பாதுகாப்பற்ற கிணறுகள், மலசல கூடங்கள், மாடிப்படிகளில் விழுதல் என பல்வேறு வழிகளில் விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
பொதுவாக சிறுவர்கள் அதிக ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள். ஆனால் பெற்றோகள் பிள்ளைகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது தமது கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைத்து அவர்களை கண்டிக்கின்றனர் . இதன் காரணமாக அவர்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன. இதனால் பிள்ளைகள்  தங்களின் எண்ணங்களையும், திறமைகளையும் அடக்கி வைத்துக் கொண்டு பெற்றோகள்  வீட்டில் இல்லாத நேரத்தில் தங்களின் எண்ணங்களை  பிரயோகித்து பார்க்க முயற்சிக்கின்றனர் . இதனாலேயே வீட்டில் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக பெற்றோர்கள் இல்லாத  நேரம் பார்த்து மின் இணைப்பை ஏற்படுத்தி தொலைக்காட்சி பார்த்தல், மின்சாரத்தில் இயங்கும் விளையாட்டு உபகரணங்களுக்கு இணைப்பை ஏற்படுத்துதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
சிறுவர்கள் அதிகம் உலாவும் இடங்களாக பாடசாலைகள்,விளையாட்டு மைதானங்கள், வீடுகள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். பாடசாலை சிறார்களை ஏற்றிச் செல்லும் பேரூந்துகள் , வேன்கள்,முச்சக்கர வண்டிகள் போன்றவற்றை தகுந்த சோதனைகளுக்குட்படுத்தி அவற்றின் தரத்தை உறுதிப்படுத்திய பின்னரே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் .தொலைபேசியில் உரையாடிக் கொண்டோ அல்லது பாடலை இரசித்துக் கொண்டோ செல்வது, முன் செல்லும் வாகனத்தை முந்திக் கொண்டு செல்வது, வாகனத்தில் செல்லும் போது தூங்குவது போன்ற காரணங்களாலும் வாகனத்தை அடிக்கடி பழுது பார்க்காததாலும் பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. இவ்வாறான விபத்துக்கள் எதிர்பாராத விதமாக இடம்பெற்றாலும் அவற்றை குறைப்பதற்கு சாரதிகள் மற்றும் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள்  போன்றோர்களால்  முடியும்.
அளவிற்கு அதிகமான மாணவர்களை வாகனங்களில் ஏற்றாமலும், வாகனங்களிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தான்தான் பொறுப்பு கூறவேண்டும் என்ற எண்ணத்துடனும்,வாகன நெரிசல் ஏற்படும் நேரத்தில் நேரகாலத்துடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றால் இவ்வாறான விபத்துக்களை குறைக்க முடியும்.

இதேபோன்று வீட்டிலுள்ள பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பொறுப்புக்கூற வேண்டும். பாதுகாப்பற்ற கிணறுகள், வீட்டின் முன்னுள்ள வாய்க்கால்கள் என்பன தொடர்பாக அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிணறுகளை சுற்றி பாதுகாப்பு வேலிகள் மற்றும் வலையினால் மூடியிடுதல், வீட்டை சுற்றி பாதுகாப்பு வேலியமைத்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் இவ்வாறான விபத்துக்களை குறைக்க முடியும். இதைவிட உறவினர்  வீடுகளுக்கு செல்லும் பிள்ளளைகள் குறித்த சூழலை அறியாதவர் ளாக காணப்படுவார்கள் இவர்கள் விடயத்தில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்படும் போது அநாவசிய விபத்தை தடுக்க முடியும்.
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாலும் சிறுவர்கள் அதிக விபத்துக்களை எதிர் கொள்கின்றனர் . நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் நெருங்கிப் பழகுவதால் அவை கடித்து அல்லது காயம் ஏற்படுத்தி விபத்துக்கள் இடம்பெறுகின்றது. பாடசாலை சிறுவர்களை பொறுத்தவரையில் விளையாட்டு மைதானம், மாடிப்படிகளிலிருந்து விழுதல் போன்றவற்றினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . இவை தொடர்பில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்து இவ்வாறான விபத்துக்களை குறைக்க முடியும்.
மோட்டார்  சைக்கிளில் பயணம் செய்யும் போது போக்குவரத்து பொலிசாரின் தண்டப் பணத்திற்கு பயந்து பெற்றோர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளை தலைக்கவசமின்றி முன்னால் ஏற்றிச் செல்கின்றனர் . தலைக் கவசத்தை அணிந்தாலும் அதன் நாடிப்பட்டியை பூட்டாமல் செல்கின்றனர் . இவர்கள் விபத்து பற்றி சிந்திக்காமல் போக்குவரத்து பொலிசாரின் தண்டப் பணத்தையே தமது இலக்காக கொண்டுள்ளனர் . வரும் முன்னர்  காப்பது தான் சிறந்தது. இதற்கமைய விபத்து வரும் முன்னர்  அவற்றை குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்குரிய வழிவகைகளை செய்ய வேண்டும்.


சில சந்தர்ப்பங்களில் மன நிலையால் பாதிக்கப்பட்டு சில பிள்ளைகள் ஒதுங்கிய நிலையில் இருந்து கொண்டு தற்கொலை வரை செல்கின்றனர் . இன்னும் சில சிறுவர்கள் நெருங்கிய உறவினர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் .
ஒரு நாளில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவர்  விபத்துக்களில் உயிரிழப்பதாக பல்கலைக்கழக ஆய்வு  முடிவுகள் கூறுகின்றது. இதேபோல் ஒரு நாளைக்கு ஏழு பேர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும், இலங்கையில் ஓரினச் சேர்க்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் ஒரு இலட்சம் சிறுவர்களில் 12 பேர்கள் 16 வயது முடியும் முன்னரே கொல்லப்படுகின்றனர்  எனக் கூறப்படுகின்றது. இது 2015ஆம் ஆண்டு அதிகரித்து காணப்படும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. மேலும் ஒரு வருடத்திற்கு 600 பிள்ளைகள் விபத்தினால் இறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாக இருப்பினும் சிறுவர்களை எல்லா வகையிலும் பாதுகாப்பது எம் ஒவ்வெருவரினதும் கடமையும் பொறுப்புமாகும். உடல், உள ரீதியாக சிறுவர்களுக்கு  ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாது காத்து நாளைய தலைவர்களை இன்றே உருவாக்குவோம்.

ஏ.எம்.கஸ்பியா வீவி,
சிறுவர்  உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் ,
பிரதேச செயலகம்,
நாவிதன்வெளி

கருத்துரையிடுக

 
Top