தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அலுவலக கட்டடங்கள் மீது கற்களை வீசி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாணவர் விடுதிகளின் வசதிகளை அதிகரிக்கக் கோரியும் பெண்கள் விடுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியுமே இன்று மாணவர்களினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தின் மீது அவர்கள் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதுடன் அலுவலக தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
கல் வீச்சுத் தாக்குதல் காரணமாக நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயில் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன.
நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் கல்வி நடவடிக்கைகளும் அலுவலக செயற்பாடுகளும் முற்றாக முடக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தாரிடம் வினவியபோது, மாணவர் தேர்தலொன்று நடக்கவிருப்பதாகவும் இதனைக் குழப்புவதற்காகவே சில மாணவர்கள் திட்டமிட்டு நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இங்கு இடம்பெற்றுள்ள மோதல் காரணமாக பல்கலைக்கழக பௌதிக வளங்களுக்குப் பெரும்  சேதம் ஏற்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்படாத வசதி வாய்ப்புகள் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபாடும் மாணவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top