இவ்வாண்டின் முதல் 09 மாதங்களில் மட்டும் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200 க்கும் அதிகமாக பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 349 உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது.
கடந்த வருடத்தில் 2014 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் 36,050 பேர் எனவும் அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,440 எனவும் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் வீதிவிபத்துக்களில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 2,260 எனவும் மற்றைய 6,847 பேர் கடுமையான காயத்துக்குள்ளாகி உயிர் பிழைத்தவர்களாவார். ஆனால் 2015 ஆம் ஆண்டில் முதல் 09 மாதங்களிலேயே 2,200 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதிவிபத்துக்களால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றமை கவனித்துப் பார்க்க வேண்டியதொரு விடயமாகும். எனவே வீதி விபத்துக்களை குறைத்து அதன் மூலம் உயிரிழப்புக்களை குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தேசியத்தின் அவசியமாகும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தேசிய வீதி பாதுகாப்பு கவுன்சில் அலுவலர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நேற்று (16) அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

வீதி விபத்துக்களை குறைக்க வேண்டுமாயின் அது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவது அவசியமாகும். அத்துடன் வீதி பாதுகாப்பு தொடர்பில் புதிய சட்ட திட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வருவது கடமையாகும்.  வீதி பாதுகாப்பு தொடர்பில் புதிய தேசிய கொள்கையை அமுல்படுத்துவது அவசியமாகும். இதற்கென நீண்ட கால திட்டமொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top