தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் 8வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை சமூகத்திற்கு கிடைத்துள்ள மிகக் பெரும் கௌரவமாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதானது,

1983 ஆண்டு காலப்பகுதியின் பிற்பாடு மிக நீண்ட காலத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தமிழ் தேசியத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக இதனை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்த நாட்டின் மூவின மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு தலைமையாக மாற்றப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாகும். இப்பதவிக்கான ஆளுமை, ஆற்றல், தகுதி, அரசியல் முதிர்ச்சி மிக்க நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதானது இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.

இந்த நல்லாட்சியில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சந்தர்ப்பத்தில் தாங்கள் இப்பதவியின் மூலம் ஒரு இனத்துக்கும் அநீதி இழைக்காது அம்மக்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பீர்கள் என நம்புகின்றோம் எனவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top