கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை கிராமங்களைச் சேர்ந்த திவிநெகும பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருந்து வந்த மாதாந்த திவிநெகும உதவிக் கொடுப்பனவு இன்று புதன்கிழமை தொடக்கம் நிலுவையுடன் வழங்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்ற மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான், ஹஜ் பெருநாளை முன்னிட்டாவது இக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
மருதமுனை வலய திவிநெகும வங்கியின் கீழ் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை கிராமங்களைச் சேர்ந்த 3015 குடும்பங்கள் திவிநெகும பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு அந்தந்த மாதம் இவ்வங்கிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அது பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படாமல் நிலுவையாக இருந்து வருவதாகவும் இதனால் அதனை நம்பி வாழ்கின்ற பயனாளிகள் கஷ்டங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைக் கவனத்தில் கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோர் உரிய அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரையின் பேரில் இன்று தொடக்கம் குறித்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top