அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அடுத்த ஒரு வருடத்தில் இராஜினாமாச் செய்வேன் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எச்.எம்.நவவி ஹாஜியார் பைஅத் செய்துள்ளார்.

இந்த பைஅத், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸிற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியே வழங்கப்பட்டது. இதற்கு அக்கட்சியின் பல உறுப்பினர்கள் போட்டி போட்டனர்.
இந்த நிலையில் குறித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பல உறுப்பினர்களுக்கு பகிர வேண்டியுள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் நவவிக்கு வழங்க அக்கட்சியின் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் தீர்மானித்திருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் வட மேல் மாகாண முன்னாள் அமைச்சராவார்.
ஒரு வருடம் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்ற நிபந்தனையுடன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பொறுப்பேற்க நவவி இணக்கம் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் பைஅத் செய்யும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான முஸ்லிம் வர்த்தகரொருவரின் கொழும்பு இலத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தியின் முன்னிலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் அமானிதம் தொடர்பில் றிஸ்வி முப்தி சிறு விளக்கவுரையொன்றினை நிகழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமாச் செய்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் நவவி பைஅத் செய்ததுடன் அது தொடர்பிலான சட்ட ரீதியான ஆவணமொன்றிலும் அவர் கையெழுத்திட்டார்.
இந்த ஆவணத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி, தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட ஏழு பேர் கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top