இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. 

இன்று அக் கட்சியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்கவுள்ளன. 

இதனால், 16 ஆசனங்களுடன் அடுத்தபடியாக பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மற்றும் கிழக்கின் பல கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது. 

இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் களமிறங்கிய கூட்டமைப்பு 14 ஆசனங்களை சுவீகரித்ததோடு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று 16 ஆசனங்களுடன் இம்முறை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளது. 

கருத்துரையிடுக

 
Top