இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பபையும் மீறி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையாக நிராகரிப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் காட்டமாக சற்று முன் குறிப்பிட்டார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
விகிதாசார பிரதிநிதித்துவமும், தொகுதி முறையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை இருக்கின்ற நாடுகளில் எல்லாம் இரட்டை வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் இருக்கின்றது. தொகுதிகளில் தமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதி நிதியை தெரிவு செய்வதற்கு போதுமான வாக்குகளைக் கொண்டிராத சமூகங்கள் அத் தொகுதிகளில் மற்ற சமூக வேட்பாளர்களுக்கே வாக்களிக்க எத்தணிக்கப்படுவார்கள். இந்நிலையில் தொகுதி வாக்குகளை எண்ணி விகிதாசார முறையை கணக்கீடு செய்கின்றபொழுது சிறுபான்மை சமூகங்கள் தமக்கான பிரதிநிதித்துவங்களை தாம் பெரும்பான்மைகளாக இருக்கின்ற தொகுதிகளைத் தவிர வேறு  தொகுதிகளில் பெற முடியாது. 1977 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த 160 தொகுதிகளில் 8 தொகுதிகளே முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளாகும். அதேநேரம் தொகுதிகள் 145 ஆக குறைக்கப்படுகின்றபொழுது அது இன்னும் குறைவடையும். அதேநேரம் புதிதாக பிரேரிக்கப்பட்டுள்ள 237 ஆசனங்களில் முஸ்லிம்களுக்கு உரித்தான ஆசனங்கள் 23 ஆகும். எனவே இந்த வகையில் முஸ்லிம்களின் ஆசனங்கள் 3-2 பகுதியாக குறைவடையும். இதேபோன்று மலையக மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே சிறுபான்மை சமூகங்களின் அரசியல் இருப்பை அடியோடு அழித்து விடுகின்ற ஒரு அரசியல் இருப்பை இத்தேர்தல் முன் மொழிவினுாடாக செய்ய எத்தனிக்கப்படுகின்றது. இந்நாட்டு முஸ்லிம்கள் குறிப்பாகவும், சிறுபா்னமைகள் பொதுவாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தது அவர்களின் உரிமையை அவர் பாதுகாப்பார், அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டார் என்கின்ற நம்பிக்கையினாலாகும். ஆனால் இவ்வாறான ஒரு பெரிய அநியாயத்தை அவர் செய்ய முனைந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும்,மன வேதனைக்குரியதுமாகும். இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து சட்ட ரீதியாகவும், ஏனைய சாத்தியமான சகல வழிகளிலும் எதிர்க்கும். அதையும் தாண்டி இதனை நடைமுறைப்படுத்த முயன்றால் இந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதைப் பற்றியும் சிந்திக்கத் தயங்காது என்று அவர் மேலும் காட்டமாக குறிப்பிட்டார். 

கருத்துரையிடுக

 
Top