உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது சம்பந்தமாக, கடந்த அரசாங்கத்தினால் மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருத்தங்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினரிடம் கருத்துக்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்ட பிரதிநிதிகள் தமது பிரதேசம் சார்பிலான உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான திருத்தங்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பித்து கலந்துரையாடினர்.
சம்மாந்துறை பிரதேசத்தின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான பிரேரணையானது, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் சகல கட்சி பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள் ஆகியோரைக்கொண்டு தயாரிக்கப்பட்டது ஏற்கனவே நாங்கள் அறிந்த ஒரு விடயமாகும்.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குள் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏறக்குறைய எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வட்டாரங்கள் மற்றும் வட்டார எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு குறித்த பிரேரணையானது தயாரிக்கப்பட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சர் மன்சூர் அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணையானது எவ்வித திருத்தங்களும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு குறித்த பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு கிடைக்கபெறும் மிகச்சிறந்த ஒரு விடயமாக சம்மாந்துறை பிரதேசத்தின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான பிரேரணை இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசபை தவிசாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top