சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கணேஷா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களை இடம் மாற்றுமாறு பெற்றோர்களும் மாணவர்களும் இன்று பாடசாலையின் நுழை வாயிலை   மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆசிரியர்கள் மூவரும் பாடசாலை வேளைகளில் மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளில் அக்கறை செலுத்தாது கூடி பேசிக்கொண்டிருப்பதாகவும் தங்களின் பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பாடசாலை நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட வேலைகளைச் செய்வதாகவும் இம் மூன்று ஆசிரியர் மீதும் குற்றம் சுமத்திய பெற்றோர்கள் இவர்களை உடனடியாக  இடமாற்றுமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் A.சௌதுல் நஜீம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் குணரெட்ணம் ஆகியோர் சென்று பெற்றோருடன்  கலந்துரையாடினா். மூன்று ஆசிரியர்களையும் விசாரணை முடியும்வரை தற்காலிகமாக இடம் மாற்றுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டம்  கைவிடப்பட்டதுடன்   பாடசாலையும் இயங்கியது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் நாவிதன்வெளி தவிசாளர் ஆகியோர் “விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும் என்றும், பாடசாலையில் அதிபர் மற்றும் குறித்த மூன்று ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்விச் செயற்பாடே என்றும், விசாரணையில் பிழைகள் இரு பக்கமும் இருந்தால் குறித்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபரையும் இடமாற்றி இவ்வாறான சீரற்ற நிலைமைகள் பாடசாலையில் எதிர்காலத்தில் ஏற்பாடாதவகையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர் .

கருத்துரையிடுக

 
Top