ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினருக்கிடையே இன்று புதன்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. 

முன்னதாக, இன்று மதியம் 12.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். ஆனால் 1.45 மணியளவிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வந்தடைந்தார்.

 தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வட்டமேசை சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 குறித்த சந்திப்பில் மஹிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா குழுவினர் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி மைத்திரியுடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க , பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துரையிடுக

 
Top