(யு.எம்.இஸ்ஹாக் )

சமூகத்தின் விடிவுக்காகவும்  வட புலத்து முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்காகவும்  சிறைவாசம் செல்ல வேண்டும் என்றாலும்  நாம் தயங்கமாட்டோம் .  சமூக விரோதிகளைப் போன்று  சமுகத்தை இனவாதிகளிடம் காட்டிக் கொடுத்து விட்டு  பணத்துக்காகவும் , பிரதி அமைச்சர்  பதவிக்காவும்    வால்  பிடித்து ,தோள்  பிடித்து  அழுது  மன்றாடவும்  மாட்டோம் என்று  கல்முனை மாநகர சபை உறுப்பினரும்  லங்கா சதொசப் பணிப்பாளருமான  சி.எம்.முபீத் தெரிவித்தார் 
தொழில் மற்றும் வணிக அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டில்  நற்பிட்டிமுனை  யுவதிகள் 40 பேருக்கு அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமுக அபிவிருத்தி  அமைப்பின்  அனுசரணையுடன்  தையல் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப் பட்டது . இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே  முபீத்  மேற்கண்டவாறு பேசினார் . அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 
நமது சமுகத்தின் விடிவுக்காக புறப்பட்ட தேசியத் தலைவர் வில்பத்து காட்டை அழித்து முஸ்லிம்  மக்களை குடி அமர்த்துவதாகவும்  வெளி மாவட்டங்களில் உள்ள  முஸ்லிம்களை குடி அமர்த்துவதாகவும் இனவாதிகள் குற்றம் சுமர்த்தி வருகின்றார்கள்.  இந்தக் காணி  கடந்த 25 வருடங்களுக்கு முன்பு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால்  இரவோடு இரவாக விரட்டி அடிக்கப் பட்ட  முஸ்லிம் மக்களுடைய  காணிகளே , அவர்களுடைய  சொந்த இடங்களில் அம்மக்கள்  குடி அமர்த்தப் படுகின்றார்கள் . இதில் என்ன தப்பு  இருக்கிறது.
  25 வருடத்துக்கு மேல்  ஒரு காணி தரிசு நிலமாக  கிடந்தால்  அந்தக் காணியில் காடு விளையாமல் தங்கமலையா விளையும் . இதற்க்கு ஆதாரமாக,   விடுதலைப் புலிகளினால்  அடித்து நொறுக்கப் பட்ட 100 வருடம் பழமை வாய்ந்த பள்ளி வாசலும்  இப்பிரதேசத்தில் உள்ளது.  உண்மை நிலையை அறியாத இனவாதிகளும்  போதுபலசேனா ,சிங்கலராவய  போன்ற இனவாத அமைப்புகளும்  சேர்ந்து  இந்த விடயத்தினைப்  பெரிது படுத்தி  றிசாத் பதியுதீன் வில்பத்து காட்டை அழித்து   பாகிஸ்தானில் உள்ளவர்களையும் , அம்பாறை ,திருகோணமலை  மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களையும்   குடியேற்றி வருகின்றார்  என தம்பட்டம்  அடிக்கிறார்கள்.
அகதிகளாக இடம் பெயர்ந்த மக்களை  அவர்களுடைய சொந்த இடங்களில் குடியேற்றினால்  காடழித்து  குடியேற்றுகிறார் என்ற  அர்த்தமல்ல  25 வருட காலமாக  ஒரு நிலம்  தரிசு நிலமாக இருந்தால்   காடு வளராமல் இரத்தினக் கல்லா வளரும் அந்தக் காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுகின்றார் என்று நமது சமூகத்தை சார்ந்த  சில சமூக விரோதிகள் நயவஞ்சகர்களான   சுயநலவாதிகள் செயல்படுகின்றனர்.
சமூகத்தை  அந்நிய சமுக இனவாதிகளிடம்  காட்டிக் கொடுத்து விட்டு  ரிசாத் பதியுதினை அரசியலில் இருந்து  ஓரம் கட்டிவிடலாம் என   பகல் கனவு காண்கிறார்கள். எங்களை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கு படைத்தவனால் மட்டுமே முடியுமே  தவிர  இவர்களால் ஒரு போதும் முடியாது.  
அரசியலில்  பூச்சியமாக இருந்தவர்களை  வெளி உலகத்துக்கு அறிமுகப் படுத்தி அரசியல்வாதிகளாக்கி விட்டவர்தான்  தலைவர் றிசாத் பதியுதீன் . குறிப்பாக ஒரு சில அரசியல் வாதிகள்  தாங்களும் அரசியல்வாதி அரசியல் தலைவர்தான் என  காட்ட முற்படுகின்றனர். இது  எப்படி என்றால்  நல்ல பாம்பு படம் எடுத்து  ஆடுவதைக் கண்டு சும்மா கிடந்த  மண் புழுவும் ஆடுவதற்கு ஆசைப் படுவது போன்று உள்ளது. இவ்வாறான நயவஞ்சகர்களை  நாங்கள்தான் அரசியலுக்கு கொண்டு வந்தோம். அழைத்து வந்த எங்களுக்கு  தெரியும்  எப்படி திருப்பி அனுப்புவதென்று. கடந்த பாராளுமன்ற  தேர்தலில்  நாங்கள் விட்ட தவறை  எண்ணி மன வேதனைப் படுகின்றோம். நாங்கள் அந்த தேர்தலில்  நெல் மணிகளைதான் விதைத்தோம்  ஆனால் நாம் விதைத்த விதைகள்  கலப்படமான முள்ளும்,புல்லும் முளைக்குமென்று  சற்றும் எதிர் பார்க்கவில்லை . அவ்வாறு சற்று தெரிந்திருந்தாலும் அன்றே  ரவுண்டப்  தெளித்து அழித்திருப்போம் .
அதற்காக  நாங்கள் வருத்தப் படவுமில்லை  இறைவனின் உதவியுடன்  எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில்  உடனடியாக அல்லாவிட்டாலும்  ஊடுருவி தாக்குகின்ற  களை  நாசினிகளைப் பாவித்து இந்த தான்தோன்றிக் களைகளை  கட்டுப் படுத்துவோம் .
எமது சமூகத்தின்  விடிவிற்காகவும்  வடபுலத்து சமூகத்தின்  மீள் குடியேற்றதுக்காகவும்  அனைத்து வழிவகைகளையும்  அமைத்துக் கொடுப்பார் எமது தேசிய தலைவர் என்பதை உறுதியாக கூறிக் கொள்கின்றேன் .
எதிவரும் பாராளுமன்ற தேர்தலில்  வன்னி மாவட்டத்தில் தமிழ் கிறிஸ்தவ சிங்கள மக்களின் வாக்குகளை  றிசாத் பதியுதீனுக்கு  போட விடாமல் இன வாதத்தை தூண்டி தடுப்பதற்கும் ,சிறுபான்மை சமூகத்திடம்  இருக்கின்ற அமைச்சரின்  செல்வாக்கை இழக்கச் செய்வதற்குமான   வழிவகயாகவே  நாம் இந்த இந்த செயற்பாட்டைக் கருதுகின்றோம் . 
முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்க துணிந்து விட்டார்கள்  சமுக விரோதிகள்.   தலைவர் றிசாதினுடைய  செல்வாக்கை  மாற்று சமூகத்திடம்  இருந்து அழித்து விடலாம்  என்ற கனவு ஒரு போதும்  பலிக்காது.  இதனை சிங்கள மக்களும் ,தமிழ் மக்களும் , கிறிஸ்தவ மக்களும்  உண்மையை உணர்ந்து விட்டார்கள் . இந்த சதித்திட்டம்  பலிக்கவில்லை என்பதனால் தற்போது கூறுகின்றார்கள் அமைச்சர் றிசாத்தை  காடு அழித்து முஸ்லிம்களை சட்டவிரோதமாக  குடியேற்றிய  குற்றத்துக்காக கைது செய்து  சிறையில்  அடைக்க வேண்டும் என்று. இந்த திட்டமும் பலிக்காது  நாங்கள் நல்லதை நினைப்பவர்கள் ,நல்லதை செய்பவர்கள் ,உண்மையை பேசுபவர்கள்  நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம் .
சமூகத்தின் விடிவுக்காகவும்  வட  புலத்து முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்காகவும்  சிறைவாசம் செல்ல வேண்டும் என்றாலும்  நாம் தயங்கமாட்டோம் . இந்த சமூக விரோதிகளைப் போன்று  சமுகத்தை இனவாதிகளிடம் காட்டிக் கொடுத்து விட்டு  பணத்துக்காகவும் , பிரதி அமைச்சருக்காகவும்   வால்  பிடித்து ,தோள்  பிடித்து  அழுது  மன்றாடவும்  மாட்டோம் . முடிந்தால்  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  500க்கும் மேற்பட்ட  வாக்குகளை  இந்த நயவஞ்சகர்களால் பெற முடியுமா என சவால் விடுக்கின்றேன்  என்றார் 
இறைவன் துணையோடு அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் சார்பாக  வன்னிமாவட்டத்தில்  எதிர்வரும் பாராளுமன்ற  தேர்தலில்  02 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்  பெற்றுக் கொள்வோம் என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை . முடிந்தால் வங்குரோத்து அரசியல்  செய்யும்  புல்லுருவிகள்  வெற்றிபெற்றுக் காட்டடும்  எனவும் முபீத் தெரிவித்தார்  

கருத்துரையிடுக

 
Top