கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலிக்கும்  மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஆணையாளர் இடம் மாறி செல்லவுள்ளதாக நம்பகமாக அறிய முடிகிறது .
கடந்த நிதிக் குழு கூட்டத்தில் ஆணையாளர் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் கோவைகளை வீசி எறிந்துள்ளார் அதனை அடுத்து முதல்வர் மற்றும் உறுப்பினர்களை கேவலப் படுத்தும் விதத்தில் ஆணையாளர் நடந்துள்ளார் என தெரிவித்து அண்மையில் நடந்த மாநகர சபை மாதாந்த அமர்வில் ஆணையாளரை முதல்வர் உட்பட உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர் .
இதனை அடுத்தே  ஆணையாளர் லியாகத் அலி  இடமாறி செல்வதற்கான முடிவை எடுத்துள்ளார் . கல்முனை பிரதேச செயலகத்தில் தற்போது சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக இருப்பதால அவ்விடத்துக்கு தான் பிர தேச செயலாளராக செல்லவுள்ளதாக அறிய முடிகின்றது.

2015.04.30 அன்று நடை பெற்ற கல்முனை மாநகர சபையில் நடந்தவை ....
கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக அந்த சபையின் உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வில் ஆணையாளருக்கு எதிரான கோஷங்கள் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களினால் எழுப்பப்பட்டன.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த சபை அமர்வில் மாநகர ஆணையாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தா விட்டால் அடுத்த சபை அமர்வை பகிஷ்கரிப்போம் என்றும் சபையைக் கலைக்கக் கோருவோம் என்றும் உறுப்பினர்கள் ஆக்ரோஷம் வெளியிட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில்;
“செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிதிக் குழுக் கூட்டத்தில் ஒரு பொருள் கொள்வனவு தொடர்பில் நான் கேள்வி எழுப்பியபோது ஆணையாளர் உரிய பதிலை வழங்காமல் முதல்வரைக் கூட அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்” என குற்றம் சாட்டினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.அமீர் உரையாற்றுகையில்;
“நாங்கள் மக்களினால் தெரிவு செய்யப்பட்டு வந்த பிரதிநிதிகள்; அவர்கள் எங்களிடம் சேவைகளை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த மாநகர சபையினால் எதுவும் செய்ய முடியாமல் ஆணையாளரினால் முடக்கப்பட்டிருக்கின்றோம். அவ்வாறாயின் நாம் ஏன் இந்த சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும். அதிகாரிகள் மாநகர சபையை நடத்தட்டும்
முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் மாநகர சபையில் இருக்கின்ற அதிகாரங்கள் என்ன? எவற்றை எல்லாம் செய்ய முடியாது என்பன குறித்து ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் தர வேண்டும். அவர தொடர்ந்தும் வரம்பு மீறி தன்னிச்சையாக எதேச்சதிகார போக்குடன் செயற்படுவாராயின் இந்த சபையை கலைத்து விடுமாறு நாம் அரசாங்கத்திடம் கோருவோம். அப்படி சபை கலைக்கப்பட்டால் மக்களிடம் இருந்து நாம் தப்பிக் கொள்ளலாம்” என்று சூளுரைத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் உரையாற்றுகையில்;
“சிராஸ் மீராசாஹிப் முதல்வராக பதவி வகித்த காலத்தில் அவரது முழுமையான கட்டுப்பாட்டில் நான்காக மடிந்து கூனிக்குறுகி செயற்பட்டவர் தான் இந்த ஆணையாளர். தற்போது அவர் சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கிறார். இதன் பின்னணி என்ன?
இந்த நிலை நீடிக்குமாயின் உறுப்பினர்கள் அனைவரும் சபையை பகிஷ்கரிக்க வேண்டும். அடுத்த சபை அமர்வு தொடக்கம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு, அவர்கள் இங்கு பிரசன்னமாகியிருக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு அவர்களிடம் முதல்வர் விளக்கம் கேட்டு எங்களுக்கு தெளிவுபடுத்த முடியும். அவ்வாறு இல்லையாயின் நாம் இந்த சபையில் இருப்பதில் அர்த்தமில்லை” என்று குறிப்பிட்டார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சி.எம்.ஏ.முபீத் உரையாற்றுகையில்;
“மக்களினால் தெரிவு செய்யப்பட்டு இந்த மாநகர சபைக்கு வந்துள்ள உறுப்பினர்களை எமது ஆணையாளர் மதிப்பதில்லை. மக்கள் சார்பான எமது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றித் தருவதில்லை. அவரை சந்திக்க சென்றால் கதிரையில் உட்காருங்கள் என்று கூட சொல்வதில்” என கவலை தெரிவித்தார் .
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம்.முஸ்தபா உரையாற்றுகையில்;
“நாங்கள் திருடர்கள் இல்லை. எமக்கு வருமானம் ஈட்டக் கூடிய சொந்தத் தொழில்கள் இருக்கின்றன. சொந்தப் பணத்தில் கூட பொதுச் சேவை செய்கின்றோம். இங்கிருக்கின்ற எந்தவொரு உறுப்பினரும் மாநகர சபை நிதியை சூறையாடவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே முனைகின்றோம். அவற்றை ஆணையாளர் ஏன் தடுக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ் தேசியக் கூடமைப்பு உறுப்பினர் எம்.ஜெயக்குமார் உரையாற்றுகையில்;
“இந்த சபையின் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது கௌரவம் பேணப்பட வேண்டும். உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் எம்மை நம்பி இந்த சபைக்கு அனுப்ப்யுள்ளனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் சேவையாற்றுவதற்கு ஆணையாளரும் ஏனைய அதிகாரிகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
உறுப்பினர்களின் ஆக்ரோசமான கருத்துகளைத் தொடர்ந்து அவற்றுக்கு பதிலளித்த முதல்வர் நிஸாம் காரியப்பரும் காட்டமாக உரையாற்றினார்.
“நான் பிரதி முதல்வராக இருந்த காலத்திலும் சரி தற்போது முதல்வராக பதவி வகிக்கும் காலத்திலும் சரி அதிகாரிகளின் கடமைகளில் ஒருபோதும் தலையிடவில்லை. எனது நல்லெண்ணத்தை அதிகாரிகள் பலவீனமாக கருதி விடக் கூடாது. எந்தவொரு அதிகாரியின் மீதும் நான் மேலாண்மை செலுத்தவில்லை. நான் அதனை விரும்புகின்றவனும் இல்லை. மேலாண்மை செலுத்தியவர்களின் இன்றைய நிலை என்னவெண்டு எல்லோரும் அறிவோம்.
ஒழுக்க விழுமியங்களை பேணும் வகையிலேயே நான் அனைவருடனும் நல்லெண்ணத்துடன் செயற்படுகின்றேன். அதனை யாராவது எனது பலவீனம் எனக் கருதி வரம்பு மீறினால் நான் உரிய அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதிகாரிகளுக்காக சபையைக் கலைக்க வேண்டியதில்லை. அவர்களை விட ஒரு நாளாவது மேலதிகமாக நாம் இந்த சபையை அலங்கரித்து விட்டே செல்வோம்” என்று முதல்வர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top