கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்

"பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் அதிகாரங்கள் முற்றாக மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும். குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒட்டுமொத்தமாக இச்சபைகளுக்கு வழங்கப்படவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட். 
 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரனின்  அயராத முயற்சியால் கல்முனை, விஷ்ணுபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வடிவேல்
சிறுவர் பூங்காவின் திறப்புவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் விழாவில் தொடர்ந்து உரையாற்றுகையில், "நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது போல், கிழக்கு மாகாண சபையிலும் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்த நல்லாட்சி தொடர்ந்து வருகின்றது.
கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு, எந்தளவு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது ஒரு புறமிருக்க அவற்றையெல்லாம் தாண்டி எமது வேலைத் திட்டங்களை மிக ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரைத் துடைக்கின்ற ஒரு பொறுப்பும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களிடமிருந்து பெறப்படும் வரி வருமானம் மட்டுமல்ல, எல்லா வருமானங்களும், வரிகளும் எமது மக்களுக்காக மாகாண சபை மூலம் செலவிடப்படும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலமே இங்குள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் சக்தி எமக்கிருக்கும். எல்லாவற்றையும் தாண்டி எமது மக்களின் துயர் துடைப்பதற்காக நாம்போராடிக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக வேலை இல்லை என்ற ஒரு குறை இல்லாத மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவதுடன், எமது ஆட்சிக் காலத்துள் இந்நிலையைத் தோற்றுவிப்போம்" - என்றார்.
 விழாவின் போது மாகாண சபை உறுப்பினரால் மக்கள் சார்பில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீக் அகமட் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். பாண்டிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் அமரர் வேல்முருகு ஞாபகார்த்த சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல்லையும் முதலமைச்சர் வைபவ ரீதியளாக நட்டுவைத்தார்.
கருத்துரையிடுக

 
Top