டாக்டர் வை.எல்.யூசுப் 

புதிதாக நடைமுறைப் படுத்துவதற்கு முன் மொழியப்பட்டுள்ள தேர்தல் சட்டமூலமானது தற்போதுள்ள விகிதாசாரமுறையில் விருப்புவாக்கு அகற்றப்பட்டு மேலும் 29 அல்லது 30 ஆசனங்களை புதிதாக தேசிய விகிதாசார பிரதி நிதித்துவம் எனும் ஒரு பிரிவுமுறைக்கு ஓதுக்கப்பட்ட ஒரு தேர்தல்முறையாக சொல்லப்படுகின்றது. அதாவது மொத்த ஆசனங்கள் 255 அல்லது 254 ஆக உயர்வடையும். விருப்பு வாக்கு நீக்கப்படும் போது அதிகூடுதலாக விருப்புவாக்குப் பெற்றவர் என்பதற்கு பதிலாக, அதிகூடுதலான வாக்கைப்பெற்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றவரைத் தீர்மானிக்கும் முறை என்று கூறப்படுகிறது. 
இங்கே கவனிக்கவேண்டிய முக்கிய விடயமானது, மேலதிகமாக உள்வாங்கப்படுகின்ற 30 ஆசனங்களின் பெரும் பகுதி தற்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற முறைப்படி ஆகக்கூடுதலான ஆசனத்தைப் பெறுகின்ற பெரும்பாண்மைக் கட்சிக்கே செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அக்கட்சி தனியாக ஆட்சியமைக்கும் தகுதியைப் பெறுமென்றும் சிறுபாண்மைக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தி இழக்கச்செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையைத் தவிர்ப்பதற்காகவும் சிறுபாண்மைச்சமூகத்தின் ஆசனங்களை இனவிகிதாசாரத்திற்கேற்ப பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கருத்துக்கள் கோரப்படுவதாகவும் அறிகிறோம். பின்வரும் யோசனை ஒன்றை இனவிகிதாசார ஆசனங்களைப் பாதுகாப்பதற்காக முன்மொழியலாம் என நினைக்கிறேன்.
உதாரணமாக 10 வீதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இன விகிதாசார அடிப்படையில் 26 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 16 எனக் கொள்வோம். எஞ்சிய 10 ஆசனங்களும் தேசிய விகிதாசார பிரதி நிதித்துவம்(  ) இலிருந்து வழங்கப்பட வேண்டும்.
இதனை எந்தக்கட்சிக்கு என்ன அடிப்படையில் வழங்க வேண்டு மென்பதை பின்வரும் அடிப்படையில் தீர்மானிக்கலாம். 
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பதியப்பட்ட முஸ்லிம்களின் மொத்த வாக்கு அண்ணளவாக 1450000 ஆகும். இதில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 1000000 என எடுத்துக் கொள்வோம். வரப்போகும் பொதுத் தேர்தலில் பின்வரும் விகிதாசாரத்தில் மாற்றுக்கட்சிகளுக்கு அந்த 1000000 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்வோம். உதாரணமாக
முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்………..300000  ---------- 3 ஆசனங்கள்
அ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகள்………………..200000--------------2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வாக்குகள்………….300000----------------3 ஆசனங்கள்
சிறிலங்கா சுதந்திரக்கட்சி பெற்ற வாக்குகள்……….100000---------------1 ஆசனம்
இதர கட்சி பெற்ற வாக்குகள்…………………………..75000-----------------1 ஆசனம்
இங்கே பெரும்பாண்மைக் கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற சிறுபாண்மை மக்களின் வாக்குகளை எண்ணுவதில் ஏற்படும் சிரமத்தைத் தவிற்பதற்கு வழங்கப்படுகின்ற வாக்குச்சீட்டை ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நிறம் அல்லது குறியீடு என வழங்கப்பட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் அளிக்கப்பட்ட ஒவ்வொர இனத்தினதும் வாக்குகளின் எண்ணிக்கையையும் சரியாகக் கணக்கிடலாம். இதனை எண்ணுவது விருப்பு வாக்கு எண்ணுவதைவிட கடினமற்ற முறையாகவே இருக்கும். இம்முறையின் மூலம் பின்வரும் நன்மையையும் எதிர்பாக்கலாம்.
01. ஜனநாயகம் மேலோங்கும்
02. எந்த இனக்கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும், இனவிகிதாசார முறையில் ஆசனங்கள் பாதுகாக்கப்படுமென்பதால் யாரும் எந்தக்கட்சியில் சேர்ந்தும் போட்டியிடலாம். இதன்மூலம் இன ஒற்றுமை சௌஜன்யம் வளரும்.
03, கட்சியை வைத்து மக்களை ஏமாற்றும் அரசியல் செய்யப்படும் சூழ்நிலையிலே, மக்கள் விரும்பியவர்களை விரும்பிய கட்சியில் நிறுத்தி தங்களது பிரதிநிதித்துவத்தையும் தேவையையும் பூர்த்திசெய்து கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை தோன்றும். இதன்மூலம் இனம், மதம், மொழி பாராது மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அரசியலைச் செய்தால் நாம் பலம் பொருந்திய கட்சியாக மாறலாம் என்ற நம்பிக்கை சகலருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு, எனக்கூறி எனது முன்மொழிவை முற்றுப் பெறச்செய்கிறேன்.

கருத்துரையிடுக

 
Top