அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் குறித்து எதிர்வரும் 13 ஆம் திகதி அமைச்சரவையில் மீண்டும் ஆராயப்பட இருக்கிறது. அதற்கு முன்னர் இந்த திருத்தம் தொடர்பான ஐ. ம. சு. மு கூட்டுக் கட்சிகளின் யோசனைகளை பெற இருப்பதாக ஐ. ம. சு. மு செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் விருப்பு வாக்கு முறையற்ற புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
20 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சுதந்திரக் கட்சி முன்னின்று செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானமான இரு அம்சங்களாக 19 ஆவது திருத்தமும் 20 ஆவது திருத்தமும் காணப்படுகிறது. எனவே தேர்தல் மறுசீரமைப்பும் உரிய காலத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.
20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்து கூட்டு கட்சிகளை அறிவூட்டி அவர்களின் யோசனைகளையும் பெற இருக்கிறோம். 12 ஆம் திகதி இது குறித்து ஐ. ம. சு. மு கட்சிகள் அறிவூட்டப்படும். 13 ஆம் திகதி இது குறித்த அமைச்சரவை பத்திரம் மீண்டும் அமைச்சரவையில் ஆராயப்பட இருக்கிறது.
புதிய தேர்தல் மறுசீரமைப்பினூடாக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார். ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் ஒருவர் பெயரிடப்பட்ட வேட்பு மனு கோரப்பட இருக்கிறது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் விருப்பு வாக்கற்ற தேர்தல் மறுசீரமைப்பு முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் புதிய திருத்தம் மேற்கொள் ளப்படும்.
19 ஆவது திருத்தத்தைப் போன்றே 20 ஆவது திருத்தமும் நிறைவேற்றப்பட வேண்டும். ஐ. தே. க. என்ன கூறினாலும் 19 ஆவது திருத்தத்தின்போது 2 3/4 மணி நேரம் குழுநிலையில் திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டு அவை மாற்றப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கையில் இடம்பெறும் ஜனநாயக மாற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது என்றார்.

கருத்துரையிடுக

 
Top