நகர அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் குழுவும் இலங்கை காணி அபிவிருத்தி மற்றும் மீட்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் குழுவினரும் இன்று வியாழக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து கல்முனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து வருகின்ற தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இக்குழுவினர் கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை முதல்வர் செயலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்தாலோசித்தனர்.
இதன்போது கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள மூன்று பிரதான விடயங்கள் குறித்து மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.
கல்முனைத் தொகுதி மக்களின் நீண்ட காலப் பிரச்சினையாக இருந்து வருகின்ற வயல் காணிகளை குடியிருப்புக்காக நிரப்புதல், சாய்ந்தமருது தோணா  அபிவிருத்தி, கிட்டங்கி வாவி மற்றும் அதனோடிணைந்த நீர்ப்பாசனத் திட்டம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலான நகல் திட்டங்கள் மற்றும் வரைபடங்கள் அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்டு- அவற்றில் காணப்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னதாக அவற்றில் காணப்படுகின்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் யாவும் செயல்முறை ரீதியாக மிகவும் ஆழமாக பரீட்சிக்கப்பட்டு- நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என முதல்வர் இதன்போது வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடங்களுக்கு நேரடியாக சென்று இவ்விடயங்களை ஆராயுமாறு முதல்வர் நிஸாம் காரியப்பர் இக்குளுவினரைக் கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

 
Top