உதுமாலெப்பை! (மா.உ )

                      
பொத்துவில் பிரதேசம் கடந்த 03 தசாப்த காலமாக நிகழ்ந்த யுத்த சூழ்நிலையிலும் இயற்கை அனர்த்தங்களிலும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அக்கரைப்பற்றில் இருந்த பொத்துவில் செல்லும் போது தாண்டியடி, கோமாரி, ஊரனி, 60ம் கட்ட கிராமம், கனகர் கிராமம் போன்ற கிராமங்களில்; தமிழ் மக்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் சேனைப்பயிர், காய் கறிப் பயிர்களைச் செய்து வந்தனர்.

கனகர் என்ற கிராமத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்தும் வந்தார்கள். கடந்த கால யுத்த சூழ்நிலையால் அச்சத்தில் காரணமாக தமிழ் மக்கள் தங்களின் காணிக்குள் செல்ல முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டன.

இதே போன்று பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த கிரான் கோவையில் உள்ள 502 ஏக்கர் விவசாயக் காணி, செங்காமம், தேக்கன் சேனை, தோணிக்கம, ஆம வெட்டுவான், இறத்தல் போன்ற பிரதேசங்களில் விவசாயம், சேனைப்பயிர் , காய் கறிப் பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளில் அம்மக்கள் விவசாயம், சேனைப்பயிர் செய்வதனை வனவள பாதுகாப்புத் திணைக்களம் எல்லையிட்டு தடை செய்துள்ளனர்.

இது விடயமாக பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நான் பல தடவைகள் வனவள அதிகாரிகள் மத்தியிலும் கோரிக்கை விடுத்து வந்துள்ளேன்.

நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலமையில் நமது பொத்துவில் பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாயம், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை செய்வதற்கான அனுமதியினை பெற அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி தலைமையில் நடை பெற்ற போது,

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. த. கலையரசன் அவர்களினால் பொத்துவில் பிரதேச சங்கமன் கண்டி, கோமாரி, ஊரனி பிரதேசங்களில் உள்ள காணிகளில் சேனைப்பயிர், காய்கறிப் பயிர்ச்செய்கை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்;

பொத்துவில் பிரதேச மக்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் விவசாயம் செய்வதற்கு செல்கின்ற போது வனவள திணைக்கள அதிகாரிகளால் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்; முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும் முன்னாள் கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, நானும் இணைந்து பொத்துவில் பிரதேச மக்கள் மீது உண்மைக்குண்மையாக அன்பு வைத்து எங்கள் சக்திக்குட்பட்ட வகையில் முடியுமான வரை கடந்த ஆறரை வருடங்களில் பொத்துவில் பிரதேச மக்களுக்கு பணி புரிந்துள்ளோம்.

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம், ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது, முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான கட்சிகளை புறந்தள்ளி ஒதுக்கி விட்டு கிழக்கில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு நல்லாட்சி நடை பெறுவதாக பெருமை பேசுகின்றீர்கள். கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையை உருவாக்கி வரலாற்று அபிவிருத்திப் பணிகள் செய்து மாகாண சபைக்கான அதிகாரங்களையும் பெற பெரும் பங்காற்றிய பல கட்சிகளுடன் எந்தவித பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளாமலும், அக் கட்சிகளுக்கு தெரியாமல் தேசிய அரசு என்ற போர்வையில் 03 கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளீர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்கள் இன்றும் எங்களோடு எதிர்க்கட்சி ஆசனங்களில் உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக ரீதியில் இயங்கும் கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை கௌரவமான முறையில் எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பததற்காகவே 05 கட்சிகளைச் சேர்ந்த 10 மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்க் கட்சி ஆசனங்களில் அமர தீர்மாணித்துள்ளோம்.
இன்று கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் மிக முக்கியமான தினமாகும். அரசியல் கட்சிகள் ஒப்பந்தங்கள் செய்து விட்டு ஒப்பந்தங்களை மீறி செயற்படும் முஸ்லிம் காங்கிரஸினதும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.

எங்களின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை. அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து விட்டு அரசியலில் இருந்து விடை பெறுவதற்கும் தயாரான நிலையில் தான் இன்று எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வர்தற்கு தீர்மாணித்துள்ளோம்

மஹிந்த ராஜபக்ஷ அரசு நல்லதில்லை என்பதற்காகத்தான் ஆட்சி மாற்றம் நடை பெற்றுள்ளது. பழைய கதைகளை கதைத்து காலங்களை வீனடிக்காது நல்ல காரியங்களை செய்து காட்ட வேண்டிய பாரிய பொறுப்புக்கள் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையில் நமது மக்களுக்கு நடை பெறும் நன்மையான விடயங்களுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவோம்.


நமது மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்படுவோம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு உண்மைக்குண்மையாக இலங்கை முஸ்லிம் மக்கள் மீது அக்கரை இருந்திருந்தால் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசி விட்டு சமூக உணர்வுகளை மதித்து மஹிந்தவின் அரசை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும் அல்லது பாணந்துறை, பேருவலை பிரதேசங்களில் முஸ்லிம் மக்களும், பள்ளிவாசல்களும் தாக்கப்பட்ட போது அமைச்சுப் பதவிகளை ராஜினமா செய்து சமூகத்திற்காக மஹிந்தவின் அரசிலிருந்து வெளியேறி முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருக்க வேண்டும்.

அதனை முஸ்லிம் காங்கிரஸ் செய்யவில்லை. மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்க்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளை செயல்படுத்து வரும் எங்களுக்குத்தான் தலைவர் அஸ்ரப் அவர்களைப் பற்றிய பூரண வரலாறு தெரியும். தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராகவும் உறுப்பினர் தவம் என்ன செய்தார் என்பதை இச் சபையில் நான் கூறுவதற்கு இடமளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

நமது நாட்டில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக் கூடாது என இனவாதிகள் கூறிய போதிலும் வட – கிழக்கு மாகாண பாடசாலைகள், ஏனைய நிகழ்வுகளில் தமிழ் மொழியிலேயே தேசிய கீதம் பாடப்பட்டு வருகின்றன. யார் என்ன சொன்னாலும் நமது தாய் மொழியான தமிழ் மொழியை நமது காரியாலயங்களில் நடை பெற வேண்டும் என கோரிக்கை விடுவது நமது உரிமையாகும்.

அம்பாரை, திருகோணமலை மாவட்ட அரச அதிபர்கள் நூறு வீதம் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தெரிவித்து செயல்படுவதற்கு நமது கிழக்கு மாகாண சபை அரச அதிபர்களுக்கு விசேட வேண்டுகோளை  விடுக்க வேண்டும். அம்பாறை மாவட்ட அரச காரியாலயம் பெரும்பான்மையான கடிதங்களை தமிழ் மொழியில் அனுப்பி வருகின்றனர்.

இருந்த போதிலும் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில் முழுமையாக தமிழ் மொழி ஊடாக கடிதத் தொடர்புகள் நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்து இனவாதக் கருத்துக்களை நாம் முன்வைக்காமல் ஆட்சி மாற்றம் நடை பெற்றுள்ள இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நமது மக்களுக்கு நல்ல விடயங்களை புரிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top