அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவணையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று  (24) வெள்ளிக்கிழமை கேலாகலமான இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹாகெதர, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், சாய்ந்தமருது அஸ்லம் பிக்மாட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.அஸ்லம் றியாஜ் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

சாய்ந்தமருது அஸ்லம் பிக்மாட் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 14 கழகங்கள் பங்குபற்றுகின்றன. இச்சுற்றுப்போட்டி அணிக்கு 8 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாகும். போட்டிகள் யாவும்  (24) வெள்ளிக்கிழமை தொடக்கம்  சனிக்கிழமையும்  (25), ஞாயிற்றுக்கிழமை (26) சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்படும் அணிக்கு பொலிஸ் வெற்றிக் கிண்ணமும் 15 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதுடன் இரண்டாம் இடத்தினை பெறும் அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் போதைப் பொருள் பாவணைக்கு எதிராக பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்படும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.ஏ. கபாரின் செயற்பாடுகளையும் நடவடிக்கையினையும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளும், கல்முனை பிரதேச மதத் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கருத்துரையிடுக

 
Top