கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
(அப்துல் அஸீஸ் )

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளில் அவர்கள் மீண்டும்  சென்று குடியேறாமல் தடுப்பதற்காக எந்தவித அடிப்படையும் இல்லாமல் அங்கு நடைபெறுகின்ற சிறிய சிறிய அபிவிருத்தி வேலைகளை கூட செய்ய விடாமல் தடுப்பது என்பது அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுடைய அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். இதற்குப் பின்னால் அரசியல் வாதிகளின் கரங்கள் இருப்பதென்பது இக்கால கட்டத்தில் கவலைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்  தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

பல விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் தமிழ்  முஸ்லிம் உறவுகள் வளரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இவ்வாறான செயல்கள் முட்டுக்கட்டையாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. கடந்த கால கசப்பான சம்பவங்கள் மறைந்து வருகின்ற இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடானது முஸ்லிம்களின் மத்தியில் மீண்டும் ஓர் அச்ச நிலையினை தோற்றுவித்திருக்கின்றது. ஆகவே இது சம்பந்தமான விடயங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு அணைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாடு காலத்தின் கட்டாயமாக இருக்கின்ற அதே வேளை இவ்வாறான சமாதானத்தை குழப்புகின்ற முன்னெடுப்புகளை யார் செய்தாலும் அவர்களை உடனடியாக சமாதானத்தை குழப்புகின்றவர்கள் என்ற வகையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் 


கடந்த யுத்த காலத்தின் போது முஸ்லிம்களுடைய உயிர்கள்,உடைமைகள் இழக்கப்பட்டதற்கப்பால் மிக திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம்களுடைய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு சுனாமிக்கு பின்னரான காலங்களில் சமூக தொண்டு நிறுவனங்களினூடாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களினூடகவும்,அரச திட்டங்களினூடாகவும் மிக திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களின் பூர்;வீகமான காணிகளில் குடியேற்றங்கள் செய்யப்பட்டு அவைகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.

எந்தவிதமான உரிமைகளும் இல்லாமல் அவ்வப்போது முஸ்லிம்களுடைய காணிகளில் அத்துமீறல் செய்வதும், இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் பக்கபலமாக இருப்பதும் அரச நிருவாகத்தில் இருப்பவர்களுக்கு  அழுத்தங்களை கொடுப்பதன் ஊடாக  அவர்கள் நினைப்பதை சாதிக்கின்ற நிகழ்வு யுத்த காலம், அதன் பின்னரான ஆயுதக்குழுக்களின் காலம், ஆட்சி மாற்றத்திற்கு முன்னரான காலம், ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான காலம் என எந்தப்பாகுபாடும் இல்லாமல் இன்று வரை இந்த அத்துமீறல்களும், அபகரிப்புகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. யுத்த காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை அப்போதிருந்த பெறுமதியிலும் பார்க்க மிகக்குறைந்த விலைகளில் இன்னாருக்கு கொடுங்கள் என்ற விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான காணிகள் பறிபோயின என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top