Dr.Y.L.Yoosuf

இன்று எமது சமூகம் ஏனைய இரு சமூகங்களுக்கிடையிலும் நெருக்குதலுக்குள்ளாக்கப் படும் நிலையில் காணப்படுகிறது. முஸ்லிம்களின் பாரம்பரிய கல்முனை எனும் பெயரை சூறையாடுவதில் ஒரு சமூகமும் முஸ்லிம்களின் பாரம்பரிய ஜெய்லானி பள்ளிவாசலை தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரில் அகற்றுவதில் மற்றைய சமூகமும் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.என டாக்டர் வை.எல்.யூசுப்  ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் 
 அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 
எமது அரசியல் தலைமத்துவங்கள் இதனை கண்டும் காணாதது போலவே இருப்பது கவலையளிக்கின்றது. அது மட்டுமல்ல இழக்காத காணிகளையும் இழந்தவையாக காட்டிக்கொண்டு அவைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களின் முயற்சிகளுக்கு மத்தியில் இழந்த காணிகளையாவது பெற்றுக்கொடுக்க இயலாத எமது தலைவர்களை என்னவென்று கூறுவது?  இவையாவும் எமது சமூகத்தின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதனையே காட்டுகிறது. இவ் ஆபத்திற்கு பகுதிக் காரணம் எமது தலைவர்களின் சுயநலம் தோய்ந்த கையாலாகாத தனம் என்று கூறினால் அது மிகையாகாது.
 இந்நிலையில் எமது சமூகத்தின் தலைமத்துவங்களின் பரிமாணங்கள் நிச்சயமாக மாற்றப்பட வேண்டியதன்  அத்தியவசியம் வெகுவாக பலராலும் உணரப்பட்டிருக்கின்றது. அதாவது சமூகங்களுக்கிடையிலே ஒற்றுமையை வளர்க்க வேண்டிய முயற்சிகளுக்கு மத்தியில் எமது உரிமைகளையும் பாதுகாப்பான வளமான வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான இராஜதந்திர ரீதியான முயற்சிகளை, அறிவு  பூர்வமாக சிந்தித்து ஆராய்ந்து தண்ணீரினூடாக நெருப்பைக் கொண்டு செல்வது போன்று முன்னெடுக்க வேண்டும். அதே வேளையில் எமது சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை வளப்படுத்தத் தேவையான அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தலைவர்களாகவும் இவர்கள் இருக்க வேண்டும்.
எமது சமூகத்தின் ஒற்றுமையின்மையிலும் அரசியல் சுயநலம் எனும் பலவீனத்திலும் குளிர்காய காத்திருக்கின்றவர்கள் பிரதேசரீதியான சுயாதீனம் மற்றும் அபிவிருத்தி எனும் பெயரில் பொதுமக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக்கோரிக்கை இதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபையை வழங்குவது கல்முனை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல முழு அம்பாறை வாழ் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. ஏனெனில் அம்பாறைக்கு வெளியே சென்று இப்பிரதேச முஸ்லிம்கள் தங்களின் ஊர் கல்முனை என்று கூறுவதே வழமை. தற்போது கல்முனையில் 25 வீத சிறுபாண்மையாகக் காணப்படும் தமிழ் சகோதர இனம் 75 வீதமாகக் காணப்படும் அதே கல்முனை முஸ்லிம்களுக்கும் ஏனைய அம்பாறை வாழ் சகோதரர்களுக்கும் சொந்தமான கல்முனை எனும் பெயரை தனியாக உரிமை கொண்டாட முன் வந்திருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பாரம்பரிய கல்முனை நகரம் இழக்கப்படும் ஆபத்து மட்டுமல்ல இதன் பின்விளைவு , முழு கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம்களினதும் முகவெத்திலை அல்லது இதயம் என்றழைக்கப்படும் கல்முனையே எம்மை விட்டு பறிபோகும் ஆபத்தை இத்தனியான பிரதேச சபைக் கோரிக்கை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதுமட்டுமல்ல, கல்முனைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தனியான பிரதேச சபை சாய்ந்தமருதுக்கு வழங்கப்படுமானால் கல்முனை வாழ் மக்கள் சாய்ந்தமருதுக்கு எந்தப் பொருளும் வாங்குவதற்கு செல்லக்கூடாது என்று குத்பா பிரசங்கம் செய்து அவர்களின் பிரதேச சபை வருமானத்தை தடுப்போம் என சில உலமாக்கள் சூழுரைத்திருப்பதாக அறிகிறோம். அவ்வாறு நடந்தால் சாய்ந்தமருது உலமாக்கள் சும்மா இருப்பார்களா? அதாவது பிரதேசவாதமும் பிளவும், ஒரு மனிதனின் கண்களைப் போன்று இருக்கும் இரு ஊருக்கும் இடையில் ஏற்படுவது உறுதியாவது போல் தென்படுகிறது. இங்கேதான் இஸ்லாம் இது சம்பந்தமாக எதனைக் கூறுகின்றது என சிந்திக்க சகலரும் கடமைப் பட்டுள்ளோம்.
மூசா அலைஹிஸ்ஸலாம் ஏழு மலை கடந்து அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்ற போது தனது மக்களை தன் சகோதரரான ஹாருன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு செல்கிறார்கள். அப்போது ஒரு கடவுள் தோன்றி  அச்சமூகத்தில் சிலரை வழிகெடுக்கின்றது. அதாவது அச்சமூகத்தில் சிலர் அந்த கடவுளை வழிபடுகின்றனர். ஹாருன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வழிபடுதலை தடுக்காததனை மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆச்சரியத்தோடும் வேதனையோடும் வினவ, ஹாருன் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள், மூசா அவர்களே, “நான் இந்த தீய வழிபாட்டை தடுக்க முனைந்திருந்தால் உங்கள் சமூகத்தின் மத்தியில் பிளவு  ஏற்பட்டு விடும் என பயந்து நீங்கள் வரும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்தேன் , நீங்கள்தான் இதனைத் தடுக்க வேண்டும்” எனக் கூறினார்கள். அல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அனுப்பிய அறிவித்தலில் ஹாருன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்தது சரியானது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப்பின்னணி கற்றுத்தரும் பாடம் என்ன என்று சிந்திக்கமாட்டோமா?
அல்லாஹ் கூறவில்லயா? “நான் எந்தப்பாவத்தையும் மன்னிப்பேன் எனக்கு இணை வைக்கும் பாவத்தைத் தவிர” என்று. மேலே கூறப்பட்ட வரலாற்றிலே ஹாருன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்த பாவத்தை மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரும் வரைக்கும் தடுக்காமல் இருந்தது சரியானதே என்று அல்லாஹ் கூறியது, மன்னிக்கவே முடியாத இணை வைக்கும் பாவத்தைத் தடுப்பதை விடவும் சமூகத்தின் மத்தியில் பிளவைத்தடுப்பது அல்லது அத்தகைய ஆபத்தைத் தடுப்பதையிட்டும் முன்னெச்சரிக்கையாக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது எனும் தத்துவம் இந்த வரலாற்றின் படிப்பினை இல்லயா? சிந்தியுங்கள் சகோதரர்களே.
முஸ்லிம் காங்கிரசின் சுய நலவாத அரசியல் போக்கிற்கு சமூகத்தைப் பலிக்கடாவாக்குவது எந்த விதத்தில் நியாயம்? இவர்கள் தங்களது தலைமைத்துவத்தையும் அரசியல் கதிரையையும் பாதுகாப்பதை பிரதான நோக்காகக் கொண்டவர்கள். இவர்களை வைத்து சமூகத்தின் பாதுகாப்பையும் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா? ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டு வந்த மு.கா, பிரிவினை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூற தற்போது முற்படுகின்றார்களா? முன்னை நாள் அமைச்சர் அதாவுல்லாஹ் கல்முனையிலிருந்து சாய்ந்தமருதை பிரித்துக் கொடுக்கப் போகிறார் என்று வரிந்து கட்டி வசை பாடிய மு.கா தலைவர்கள் தற்போது அவர்களே பிரித்துக் கொடுக்க முன்வந்திருப்பதானது அவர்களின் அரசியல் சுயநலத்தின் உச்சகட்டத்தினை வெளிப்படுத்தவில்லையா?
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப் படக்கூடாது என்றோ  வழங்கவேண்டும் என்றோ நான் கூற முன்வரவில்லை. மாறாகஇ இஸ்லாம் முற்றிலும் வெறுக்கும் பெரும் பாவமாகிய சமூகப்பிளவுக்கு வழி சமைக்காமலும், குழம்பிய எமது குட்டையில் ஏனைய சமூகத்தினர் மீன்பிடிக்கவும் நாம் வழியேற்படுத்திக் கொடுக்காமலும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி யாரையும் பாதிக்காத, மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கும் வகையிலுமான ஒரு ஒற்றுமைப்பட்ட முடிவே காலத்தின் தேவையாகும்.
ஆகவே இத்தகைய பிரச்சினைகளிலிருந்து மீண்டு சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவும், சமூகத்திற்கு எதிரான சக்திகளுடன் போராடி எம்மை வாழ வைப்பதற்கு தகுதியான எதிர்கால சமூகத்தலைவர்கள் சுய நலமற்றவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும் அநீதிக்கு அஞ்சாதவர்களாகவும் பல் மொழிகளில் சொல்லாடல் வளம் மிக்கவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் உறு சுறுப்பானவர்களாகவும் சமூகப்பொறுப்பு மற்றும் உணர்வு மிக்கவர்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகையவர்களை இனங் காண்பது இலகுவான காரியமல்ல. எனினும் இதற்கான உரத்த குரல்கள் மற்றும் தூண்டுதல்கள் தொடர்ச்சியாக இடம் பெறும் பொழுது இத்தகையவர்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே முயற்சிப்போம்.என அவர் தெரிவித்துள்ளார் 


கருத்துரையிடுக

 
Top