கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் முக்கிய பிரதேசங்களுள் நிந்தவூர் பிரதேசம் குறிப்பிடத்தக்க ஒரு பிரதேசமாகும். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கும் நல்லுறவுக்கும் மட்டுமன்றி பல்வேறு மனிதநேய செயற்பாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இப்பிரதேசம் கல்வியாளர்கள், கலை, இலக்கியவாதிகள், விவசாயிகள், மீனவர்கள் நிறைந்த வளமிக்க பிரதேசமாகும்.
 "நிந்தவூர் மண்ணை ஒரு தடைவயேனும் நான் தொட்டுக் கொஞ்ச வேண்டும்" என புலம்பெயர் இலங்கைத் தமிழ்க் கவிஞர் ஒருவர் கவிதை பாடி இப்பிரதேச மக்களின் மனிதபிமான செயற்பாடுகளுக்கு முத்திரை பதித்த வரலாறும், பெரும் பேறும் பெற்ற முஸ்லிம் பிரதேசம் நிந்தவூர் எனக் குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்ளாமலிருக்க முடியாது. சுமார் 40 கிலோ மீற்றர் பரப்பளவையும், 25 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டதாக அமைந்துள்ள நிந்தவூர்ப் பிரதேச செயலகப் பிரிவானது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் நீண்ட கலாசாரப் பின்னணியையும், பாரம்பரிய, பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு திகழ்கின்றது. IMAGE_ALT இந்த வனப்புமிகு நிந்தவூர்ப் பிரதேசத்தில், பிரதேச சாகித்திய கலாசாரப் பெருவிழா ஒன்று நடத்தப்பட வேண்டும், அதன் முக்கிய அம்சமாக நிந்தவூரின் வரலாற்றையும், பாரம்பரியங்களையும், வாழ்வியல் கோலங்களையும் ஆவணப்படுத்தும் வகையிலான நூல் ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்ற அவாவும், பெரும் எதிர்பார்ப்பும் நீண்ட காலமாக நிந்தவூர் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த வாரங்களில் வெற்றி பெறாவிட்டாலும் இன்று அந்த அவா நிறைவேறுகின்றது. 
 நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி ஆர்.யூ.அப்துல் ஜலீலினைத் தலைவராகக் கொண்ட பிரதேச கலாசாரப் பேரவை பல்வேறு தரப்பினரதும் ஆதரவுடன் இந்த பேரவாவை நிறை வேற்றுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆம்! நிந்தவூர்ப் பிரதேச சாகித்திய கலாசாரப் பெருவிழாவும், "நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும்" நூல் வெளியீடும் நாளை சனிக்கிழமை பெருவிழாவாக நடைபெறுகின்றது. நிந்தவூர் மண்ணுக்கு பெருவிழா எடுக்கும் நிகழ்வாக அமையும் இப்பெருவிழா நிந்தவூரின் வரலாற்றில் குறிப்படத்தக்க சிறப்பு நிகழ்வாகும். 
 பேரவை இவற்றுக்கு மூல காரணமாகத் திகழும் நிந்தவூர்ப் பிரதேச கலாசாரப் பேரவையின் தலைவராக பிரதேச செயலாளர் ஹாஜியானி ஆர்.யூ.அப்துல் ஜலீலும், இணைத்தலைவர்களாக ஓய்வு பெற்ற அதிபர் ஹாஜியானி எம்.செய்னுலாப்தீன், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எல்.அலியாரும், செயலாளராக கலாசார உத்தியோக்கதர் எம்.ஐ.எம்.ஜவாஹிரும், இணைப்பாளராக மேலதிக மாவட்டப் பதிவாளர் இஸட்.நஸீர்தீனும், உப தலைவர்களாக உதவி பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிக்கார் ஆகியோரும் அங்கம்வகித்து வெற்றிகர செயற்பாட்டை எட்டியுள்ளனர்.
 இந்தவகையில் முன்னாள் பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவஜோதி, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சுதர்சன் போன்றோரின் அயராப் பெரு முயற்சிகளையும் விழா தொடர்பில் குறிப்பிடாமலிருக்க முடியாது. வரலாற்று நூல் இதேவேளை வெளியிடப்படும் "நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும்" வரலாற்று நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. நிந்தவூர் வரலாறும் வாழ்வியல் அம்சங்களும், அரசியல் நிர்வாக நிறுவன வரலாறு, பொருளாதாரத் துறையும் அதன் பின்புலமும், சமய நிறுவனங்களும் ஆன்மீக வளர்ச்சியும், கல்விப் பாரம்பரியம், கலை, இலக்கிய வளர்ச்சி எனும் தலைப்புகளில் வரலாற்றுக் கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. IMAGE_ALT விழா மேற்படி நிந்தவூர்ப் பிரதேசத்தின் கலாசார விழாவும் அதனுடன் கூடிய "நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும்" நூல் வெளியீடும் 04.04.2015 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச செயலக திறந்த வெளியரங்கில் நடைபெறுகின்றது. பிரதேச செயலாளர் ஜனாபா, ஆர்.யூ.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெம் இப்பெருவிழாவில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் - நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பைஸால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் ஆகியார் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர் அத்துடன் அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பீ.வணிக சிங்க விசேட அதிதியாகவும், மேலதிக மாவட்ட செயலாளர்களான கே.விமல்நாதன், எம்.ஐ.அமீர், கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் டி.யூ.டபிள்யூ.விக்ரம ஆராய்ச்சி, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்வர். மேலும் இந்த கலாசார விழாவின் தொடர் அங்கமாக "வாழ்வோரை வாழத்துவோம்" நிகழ்வு ஒன்றும் விரைவில் நடைபெறும். 
 நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்த 60இற்கு மேற்பட்டோரை இதில் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த சாகித்திய கலாசாரபெருவிழா வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்துவோம்!.. சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்றி பகிர்வோம்!
 கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம்

கருத்துரையிடுக

 
Top