அம்பாறை மாவட்டம் கல்முனையில் நேற்று  எதிரும் புதிருமாக 1983 தொடக்கம் கடத்தப்பட்டு காணாமல் போய் அல்லது படுகொலை செய்யப்பட்டவர்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வும் அதனைப் பகிஸ்கரித்து ஆர்ப்பாட்டம் செய்யும் நிகழ்வும் ஏககாலத்தில் இடம்பெற்றன.
சாட்சியமளிக்க ஏற்கனவே பெயர் பதிந்தவர்களில் 25 பேரளவில் வந்திருந்தனர். புதிய பதிவுகள் சுமார் 30 ஐ அண்மித்திருந்தது. அதே வேளை  நேற்று கல்முனையில் 100 பேரும் , இன்று 112 பேரும்  சாட்சியமளிக்க பதிவு செய்யப் பட்டிருந்தனர் 

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினுள் அமர்வு நடைபெற்ற அதேவேளை செயலகத்திற்கு வெளியே வீதியினருகாமையில் கறுப்புப்பட்டி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் அதனை ஒழுங்குசெய்த தமிழ்சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆணைக்குழு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்குள் வந்து மகஜரை வாசித்துக் கையளிக்க முற்பட்டனர்.

அச்சமயம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது முடிய வாருங்கள் என தவிசாளர் மனோகரி ராமநாதன் கூற அவர்கள் சற்று தாமதித்தனர்.
பின்னர் விசாரணை முடிய பிரதிநிதிகள் சென்று இவ் ஆணைக்குழுவைப் பகிஸ்கரிக்கதாகவும் இதில் நம்பிக்கை இல்லையெனவும் ஐ.நா.தலையீட்டுடன் கூடிய சர்வதேச விசாரணை வேண்டும் எனக்கூறி மகஜரை வாசித்துக் கையளித்தனர்.
பதிலுக்கு ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸவெல் பி பரணகம பதிலளிக்கையில்:

நாம் ஜனாதிபதியினதும் அராசாங்கத்தினதும் ஆணைக்கிணங்க மனிதாபிமான அடிப்படையில் வடக்கு கிழக்கில் இவ்விசாரணையை மேற்கொண்டு வருகின்றோம். உங்களது எதிர்ப்பை உரிய இடத்தில் தெரிவியுங்கள். எனக்கு அதுபற்றி ஆட்சேபனை இல்லை.
ஆணைக்குழுவிற்கு எதிராக நீங்கள் எங்கெங்கு தெரிவிக்க வேண்டுமோ அங்கெல்லாம் தெரிவியுங்கள்.

விசாரணை நடாத்தாமல் எப்படி தீர்வை எதிர்பார்ப்பது? விரைவில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கின்றோம். அதிலே பல தீர்வுகள் வரலாம். அதனைத் துரிதப்படுத்துமாறு கேட்டிருக்கின்றேன். விரும்பினால் மகஜரைத் தாருங்கள் என்றார்.
சிவில் அமைப்பின் பிரதிநிதி கணேஸ் கூறுகையில்:
வடக்கு கிழக்கில் கடந்தகால யுத்தத்தின் விளைவாக காணாமல் போன 20ஆயிரம் பேரைத் தேடிக் கண்டுபிடிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவான நீங்கள் இதுவரை ஆக 2 ஆயிரம் பேரை மாத்திரமே விசாரித்துள்ளனர். மீதி 18 ஆயிரம் பேரையும் விசாரிக்க குறைந்தது 13 வருடங்களாவது எடுக்கும்.இதுவரை இந்த ஆணைக்குழு ஏதாவதொரு நல்ல தீர்வைத் தந்துள்ளதா?
ஆக இதுவரை 208 பேருக்கு தற்காலிக மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கியுள்ளது. சரி அப்படியெனில் அங்த 208 பேரையும் கொலை செய்தது யார்? உலகத்தில் தற்காலிக மரண அத்தாட்சிப்பத்திரத்தை வழங்கிய ஒரே நாடு இலங்கை தான் என்றால் யாரும் மறுக்க முடியாது.
நாம் சாட்சி சொல்லிச் சொல்லி களைத்து விட்டோம். ஆனால் ஆனது ஒன்றுமில்லை.
எனவேதான் நாம் இறுதிநேரத்தில் ஒரு செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்ல வேண்டிய தேவையுள்ளது.அதற்காகத் தான் இங்கு வந்துள்ளோம்.என்றார் 

கருத்துரையிடுக

 
Top