அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில்  தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரி 15 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை முன் வைத்து கல்முனையில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம் பெற்றது.
பதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் கல்முனை பிரதேசம் முற்றாக புறக்கணிப்பு செய்யப் பட்டுள்ளது. கல்முனை என்பது தனியான ஒரு தேசமல்ல அது நாட்டின் ஒரு அங்கம் என்பதை வலியுறுத்தி கல்முனைக் குடியைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இந்த அடையாள உண்ணா விரதத்தை இன்று (04) காலை கல்முனை பிரதான வீதியில் ஆரம்பித்தார். அவருக்கு ஆதரவு  தெரிவிக்கும் வகையில் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த பலர் இந்த அடையாள உண்ணா விரதத்துக்கு ஆதரவு  தெரிவித்தனர்.
தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்த கல்முனை புதிய நகர திட்டத்தை உடன் ஆரம்பிக்க வேண்டும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக  தொடர்ச்சியாக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட கடி நீர் இன்றி இருக்கும் கல்முனைக் குடி பிரதேசத்துக்கென தனியான குடி நீர் தாங்கி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுத்தமான குடி நீர் கிடைக்க வழி ஏற்படுத்தப் பட வேண்டும், சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் பயனாளிகளிடம் உடனடியாக கையளிக்கப் படவேண்டும். போன்ற 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தே இந்த அடையாள உண்ணா விரதப் போராட்டம் கலாநிதி றியஸினால் இன்று நடாத்தப் பட்டது.
ஸ்தலத்துக்கு சென்ற பொலிஸார் உண்ணா விரதத்தை கைவிடுமாறு கோரியதற்கிணங்க அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கு மகஜரைப் பெற்றுக் கொண்டதும் 10.30 மணியளவில் உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.

கருத்துரையிடுக

 
Top