ஏ.பி.எம்.அஸ்ஹர்


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்சான்   கல்முனை பொலிஸில் பெரியநீலாவனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் வாஹித் ஜெசீல் என்பவருக்கெதிராக நிதிமோசடி தொடர்பாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இந்த முறைப்பாடு பற்றி சட்டத்தரணி துல்சான் கருத்து தெரிவிக்கையில் மேற்படி நபர் நான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தன்னை தீவிர ஆதரவாளராக இனங்காட்டிக்கொண்டு எனது அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதுண்டு இந்த அடிப்படையில் என்னோடு நெருக்கமாக இருப்பதாக மற்றவர்களுக்கு காட்டிக்கொண்டு தன்னை என்னுடைய பிரத்தியேக செயலாளர் என்று கூறிக்கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதை தற்போதுதான் என்னால் ஆதாரபூர்வமாக கையும் களவுமாக பிடிக்க முடிந்தது. நான் என்னுடைய மாகாணசபை உறுப்பினர் பதவி முடிந்த பின்னர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். பல மாதங்களாக மருதமுனையில் வசிக்கவில்லை. இந்த வேளைகளில் என்னுடைய பெயரை பயன்படுத்தி நான் சுயதொழில் உதவித்திட்டங்கள் கொண்டுவருவதாகவும்  அதனை ஏழை எளிய மக்களுக்கும் ­­ஆதரவாளர்களுக்கும் முன்னுரிமைப்படுத்தி வழங்க இருப்பதாகவும் கூறி அதற்கு பயனாளிகளின் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி அதற்கு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்த வேண்டும் என பணம் அறவிட்டிருக்கிறார்.
இவ்வாறு பல்வேறு கட்டங்களில் பல தடவைகள் ஏழை எளிய மக்களிடமிருந்து பணம் வசூலித்திருக்கின்றார். இதுவரை நாம் தீவிர விசாரணையில் ஈடு பட்டதில் சுமார் 80 பேருக்கும் அதிகமானோரிடம் இருந்து இவர் மோசடியாக பணம் அறவிட்டிருப்பதை கண்டு பிடித்துள்ளோம்.
   அமைச்சர், ரிஷாத் பதியுதீன் ஊடாக கைத்தறி பெற்றுத்தருவதாக கூறி அதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்துள்ளார். இவ்வாறு300/=க்கும் குறைவான தொகைகளைஒவ்வொருவரிடமிருந்தும் இவ்வாறு அறவிட்டுள்ளார்.  இவரால் ஏமாற்றப் பட்டவர்கள் அனைவருமே அன்றாட செலவுகளுக்கே கஸ்டப்படும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். இவர் குறிப்பிட்ட நபரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளும் போது பின்வரும்  தந்திரத்தை கையாண்டு வந்திருக்கின்றார். “இந்த உதவி உங்களுக்கு மட்டும்தான், மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருங்கள், நீங்கள் மற்றவர்களுக்கு கூறினால் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும்” என்று அறிவுறுத்தியிருக்கின்றார். அதனால் நீண்ட நாட்களுக்கு முன்னர் பணம் கொடுத்தவர்கள் கூட  இதுபற்றி யாரிடமும் கூறாமல் தமக்கு நிச்சயம் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் பயன்கிடைக்கும் என்று பேசாமல் இருந்து விட்டனர். தற்போது நாம் நேரடியாக ஏழை நெசவாளர்களை பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள சென்ற போதே இந்த விடயங்களை எம்மால் அறிய முடிந்தது.

எனவே  மருதமுனை , பெரியநீலவானை பிரதேசங்களில் வசிக்கின்ற பொது மக்கள் இந்த  நபரின் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை  தெரிவித்துக்கொள்வதோடு இவரை ஒருபோதுமே எனது தனிப்பட்ட செயலாளராகவோ அல்லது நிருவாக அலுவலராகவோ நான் நியமித்திருக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

கருத்துரையிடுக

 
Top