-சேகுதாவூத் பஸ்வக் -

கல்முனை “கடற்கரைப்பள்ளி வாசல்   கொடியேற்ற விழா”  என்று பொதுவாக   அழைக்கப்படும் இவ்விழா வழமைபோல் இம்முறையும்  ஜமாதுல்ஆகிர் மாதம் பிறை ஒன்றுடன் (மார்ச் மாதம் 21ம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இவ்விழா தொடர்ந்தும் பன்னிரெண்டு நாட்கள் நடைபெற்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜமாதுல் ஆகிர் பிறை பன்னிரெண்டாம் நாளன்று இடம்பெறும் மாபெரும் அன்னதானம் வழங்கும் வைபவத்துடன் இனிதே முடிவு  பெறும்.
அகிலத்திற்கோர் அருட்கொடையாய் வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்த உத்தம தூதர் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் இருபத்து மூன்றாவது பரம்பரையில் இந்தியாவின் மாணிக்கப்பூரில் பிறந்தவர்கள்தான்  ஷாஹுல் ஹமீது ஒலியூல்லாஹ் அவர்கள்.
இவர்கள் தமது வாழ்நாளில் இஸ்லாமிய நற்பணி நோக்குடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாத்தின் போதனைகளை செய்து வந்தார்கள்.
இவர்களின் இஸ்லாமிய பிரச்சாரச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இலங்கையின் ஜெய்லானி என்றழைக்கப்படும் இடத்திற்கும் வந்தாரகள்.
இலங்கையின் தென்பகுதிக் கரையை அடைந்து இலங்கையின் புனித ஸ்தலமான ஆதம்(அலை) அவர்களின் பாதத்தையும் தரிசித்து விட்டு தொடர்ந்தும் கரையோரப் பகுதியூடாக கிழக்கு நோக்கிச் சென்றார்கள்.
இவ்வேளையில் கல்முனையில் வசித்த பெரியார் ஒருவர் கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்தமையால் கடலில் நீராடவும் சுத்தமான காற்றைப் பெற்றுக் கொள்ளுமுகமாகவும் அன்னார் கடற்கரையோரமாக ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அங்கேயே வசித்து வந்தார்.
கடுமையான நோய் வாய்ப்பட்ட நிலையிலும் நமது மார்க்க கடமைகளை நிறைவேற்றத் தவறாத அப்பெரியாரின் கனவில் “ உமது குடிசைக்கு கிழக்கே சுமார் நூறு யார் தூரத்திற்குள் கடற்கரை மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதோடு சில அடையாளப் பொருட்களும் உண்டு. நீர் அவ்விடத்திற்குச் சென்று அவ்வாறு அடையாளமிருக்கும் இடத்தில் எனது நினைவார்த்தமாக ஓர் இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உமது பிணியும் அகன்று விடும். எனது பெயர் ஷாஹுல் ஹமீத்” என்று கூறி மறைந்தார்கள்.
கண் விழித்துப் பார்த்த போது பொழுதும் புலர்ந்திருந்தது.அவரின் உடலிலும் நோய் முற்றாக அகன்றிருந்ததோடு  நோய் இருந்தமைக்கான அடையாளங்களும் முற்றாக அழிந்தும் விட்டிருந்தன.
உடனேயே அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு குறிப்பிட்ட மண் குவியலையும் பொருட்களையும் தேடி நண்பகல் லுஹர் தொழுகை நேரத்தில் அவற்றைக் கண்டு ஆனந்தம் கொண்ட அப்பெரியார் உடனேயே அருகிலிருந்த கம்புகளைத் தறித்து அவ்விடத்தில் ஒரு பந்தலை அமைத்துக் கொண்டார்கள்.
இச் சம்பவங்கள் அன்றைய ஜும்மாத் தொழுகையின போது இவ்வூர் பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வந்து பார்த்து குறிப்பிட்ட அடையாளப் பொருட்களையும் கண்டு மகிழ்ச்சி கொண்டனர்.
தொடர்தும் பொதுமக்கள் அவ்விடத்தில் கூடத் தொடங்கினர். ஆரம்பத்தில் கட்டப்பட்ட பந்தல் செப்பனிடப்பட்டு தர்ஹாவாக மாற்றியமைக்கப்பட்டது.
செய்யிதினா ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் பேரில் குர்ஆன் பாராயாணம் செய்து வந்தனர். தர்ஹாவும் பிரபல்யம் பெறத் தொடங்கியது. இவ்வாறு தொடர்கையில் ஆண்டு தோறும் சங்கைமிகு ஒலியுல்லாஹ் பெயரில் அவர்களின் பிறந்த மாதமாகிய ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதற் பிறையுடன் கொடியேற்றப்பட்டு தொடர்ந்தும் பன்னிரெண்டு நாட்கள் அவர்களின் பெயரால் மௌலீதுகள் ஓதப்பட்டு பன்னிரெண்டாம் நாள் கொடி இறக்கப்படுவதுடன் மாபெரும் அன்னதான வைபவமும் சிறப்பாக இடம்பெறும்.
இதுவே இத் தர்ஹாவும் இங்கு இடம்பெற்று வரும் வருடாந்த கொடியேற்று வைபவமும் ஆரம்பமான வரலாறாகும்.
வழமைபோல் இந்த வருடம் நடைபெறவுள்ள கொடியேற்ற விழா நிகழ்வை முன்னிட்டும் கல்முனை கடற்கரைப்பள்ளி வாசல் மற்றும் அதனோடு இணைந்து இரு மினராக்களும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சிதருகின்றது.

கருத்துரையிடுக

 
Top