அம்பாறை மாவட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் பின்னர்  அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர்  அமைச்சர்களின்  இணைப்பாளர்கள்  என்று கூறிக் கொண்டு ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க முற்படுகின்றனர் . இவ்வாறானவர்களை  பொலிசார்  கைது செய்ய வேண்டும் . மக்களும் இவ்விடயத்தில் அவதானத்துடன் செயல்பட  வேண்டும் என்று  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின் உப தலைவர்  சிரேஸ்ட ஊடகவியலாளர்  ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்துள்ளார் .
குறிப்பாக  கல்முனை பிரதேசத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அதிகம் காணப் படுகின்றன . கல்முனை  பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்தில்  கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் இருக்க  வேறு ஒருவரால் கூட்டம் நடத்தப் பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன . கூட்டத்தை  ஏற்பாடு  செய்தவர்  என்று கூறுபவர்  தான் ஒரு அமைச்சரின்  இணைப்பாளர் என்றும்   எனது  ஏற்பாட்டில்தான்  இந்த கூட்டம்  நடை பெற்றது  என்றும் இந்த செய்தியை பிரசுரித்த செய்தியாளர் மறுப்பு செய்தி பிரசுரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் . இந்த விடயத்தை  இந்த செய்தி வெளியான ஊடக நிறுவனத்திடமும் முறையிட்டுள்ளார் .

குறித்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர்  அந்த ஏற்பாட்டாளரான  அமைச்சரின்  இணைப்பாளரிடம்  உங்களது செய்திக்கு மறுப்பு செய்தி பிரசுரிக்கின்றேன்  நீங்கள்  அமைச்சரின் இணைப்பாளர் என்பதை உறுதிப் படுத்தி  அமைச்சரால் வழங்கப் பட்ட நியமன  கடித பிரதியை  வழங்குமாறு  கோரியுள்ளார். அதற்கு அவர்  இன்னும்  அமைச்சர் கடிதம் வழங்கவில்லை  வருகின்ற திங்கட் கிழமை கடிதம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் . அமைச்சரால் கடிதம் வழங்கப் படாத ஒருவரை  எவ்வாறு  சட்டரீதியாக  பதவி பெயர் கொண்டு கூற முடியும் .

இவ்வாறான பலர் அம்பாறை மாவட்டத்தில்  அமைச்சர்களை விற்றுக் கொண்டு  வயிற்றுப்  பிழைப்பு நடத்துகின்றனர்  இவர்களுக்கெதிராக  பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எமது சங்கம் பொலீசில் முறைப்பாடு செய்யும்  எனவும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின் உப தலைவர்  சிரேஸ்ட ஊடகவியலாளர்  ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்துள்ளார் .. 


கருத்துரையிடுக

 
Top