கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் முதன்மையான இடத்தைப் பெறும் என்றால் மிகையாகாது.

ஏறக்குறைய 1700 மாணவர்களையும்,சுமார் 70 ஆசிரியர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பாடசாலையானது பல்துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றது. 

2014ம் ஆண்டு 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் 38 மாணவர்கள் சித்தியடைந்ததும், 2015ம் கல்வியாண்டுக்காக முதலாம் வகுப்பில் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் காட்டிய ஆர்வமும் இந்தப் பாடசாலையின் நிலையை பறைசாற்றுகின்றது.

இவ்வாறான நிலையை அந்தப் பாடசாலை அடைந்திருக்கிறது என்றால், அதற்கு நிச்சயமாக அதிபரின் தலைமைத்துவமும், நிருவாகமும் சிறப்பாக அமைந்திருப்பதே காரணம் என பெற்றோர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனா்.

இத்தகைய நிலையில் தான், அந்தப் பாடசாலையின் அதிபர் திறமையாக அதனை வழிநடாத்தி வருகின்ற போதிலும், சில தனிநபர்கள் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் துணையுடன் அவருக்கு பல தடவைகள் இடமாற்றம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் நியாயமற்ற முறையில் இப்பாடசாலை அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த இடமாற்றம் நியாயமற்றது என்று வெளிப்படையாகவே தெரிந்த நிலையில், இந்த விடயத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட போது அவர் எடுத்த காத்திரமான நடவடிக்கையினால் தற்போது அந்த அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்விடமாற்றத்தை இரத்துச் செய்வதில், பாடசாலையின் ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் மற்றும் பெற்றோரும் பாரிய பங்களிப்பைச் செய்திருந்தனர். கடந்த புதன்கிழமை பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், பெற்றோரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வியமைச்சின் செயலாளரையும் சந்தித்து உண்மைத்தன்மையை எடுத்துக் கூறியிருந்தனர். முதலமைச்சா் சந்திப்புக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபரின் இடமாற்றத்தினை இரத்து செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினா் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவா்களுக்கு பாடசாலையின் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திச் சபையினர் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும். தெரிவித்துள்ளனா்.

கருத்துரையிடுக

 
Top