அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின் மாட்டுப்பளை எனும் இடத்தில் இன்று(14)இடம்பெற்ற வாகன விபத்தின்போது கென்ரர் ரக வாகனமொன்று பலத்த சேதத்திற்குள்ளானதுடன் அதில் பயணித்த சாரதி உட்பட இருவரும் மயிரிழையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.
இவ்விபத்துச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகனுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது வாகனத்தில் தேங்காய்களை ஏற்றிக் கொண்டு கல்முனை சந்தைக்குக் கொண்டு செல்லும் வகையில் அட்டாளைச்சேனையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்துள்ளார்.
இதன்போது ஒலுவில் பிரதேசத்திற்கும் நிந்தவூர் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட மாட்டுப்பளை எனும் இடத்தில் அதிகாலை 3.30 மணியளவில் தமது வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென கறுப்பு நிறத்திலான மாடு ஒன்று குறுக்கிடுவதைப் போல் தென்பட்டதனால் வாகனத்தை சற்று திருப்புவதற்காக முற்பட்டபோது பாதையை விட்டு வாகனம் வயல் பிரதேசத்தினுள் பாய்ந்து அங்கிருந்த மின்சாரக் கம்பத்தில் பாரிய சத்தத்துடன் மோதுண்டது. இதன்போது வாகனத்தில் பயணித்த நாங்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிடுவோம் என்ற உணர்வு ஏற்பட்ட போதிலும் தெய்வாதீனமாக நாம் உயிர்பிழைத்தோம் என்றார் வாகனத்தின் சாரதி. இதேவேளை வாகனத்தில் மோதுவதற்காக வந்த கறுப்பு நிறத்திலான மாட்டினை பின்னர் தேடியபோதும் அது கண்களுக்கு தென்படவில்லை எனவும் சாரதி மேலும் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக அதிகளவிலான வாகன விபத்துகள் இடம்பெற்று வருவதுடன் பல உயிரிழப்புச் சம்பவங்களும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன என இப்பிராந்திய மக்கள் தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட அட்டப்பள்ளம் முதல் ஒலுவில் வரையான பிரதாபிரதேசத்தின் பிரதான வீதியில் கடந்த பல தசாப்தங்களாக தெருமின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருள் சூழ்ந்த நிலைமை காண்ப்படுவதால் தினமும் இரவு வேளைகளில் ஏதேனும் ஓர் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக இப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் காரணமாக நேற்று காலை 8 மணி முதல்; ஓலுவில், பாலமுனை, அஸ்ரப் நகர், அட்டாளைச்சேனை, மீலாத் நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் சில மணி நேரம் மின்சாரம தடைப்பட்டிருந்தன. இவ்விபத்துச் சம்பவம் பற்றி சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

 
Top