10வது ஆண்டு  கடல் கோள்  அனர்த்த  நினைவுக் கட்டுரை - எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் 

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும், அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவுகொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளூர் நிறுவனங்களும், அமைப்புகளும், பாதிக்கப்படாத மக்களும் காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூரவேண்டும். அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை விடவும் கூடுதலான வீடுகள் கட்டப்பட்ட சில மாவட்டங்களும் நம் நாட்டிலுள்ளன. அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் தொகுதிகள் கையளிக்கப்படாத நிலைமை இன்றும் உள்ளதையும் இந்த 10 ஆவது ஆண்டு நிறைவில் சுட்டிக்கபட்டாமல் இருக்க முடியாது. கிழக்கில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென சவூதி நிதி உதவியில் பல பௌதீக வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளைக் கொண்ட சுனாமி வீட்டுத் திட்டம் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படவில்லை. பெரும்பான்மை சமூகத்தினருக்கும் இங்கு வீடுகள் வழங்கப்படவேண்டும் எனும் போர்க் கொடி காரணமாகவே இந்த வீட்டுத்திட்டம் இன்றும் காடு மண்டிக் கிடப்பதையும் சுட்டிக்காட்டவேண்டும். நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்டு (தமிழ் - முஸ்லிம்களுக்கு) கையளிக்கப்பட்ட சர்வோதய சமாதான சுனாமிக் கிராம மக்களுக்கு 10 வருடங்களாகியும் வீட்டுக்காணி உறுதிகள் வழங்கப்படவோ அங்கு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவோ இல்லை. இப்படி அவலத்திற்கு மேல் அவலங்களை பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். 
10ஆவது ஆண்டு

 இத்தகைய நிலையில் தான் சுனாமி தேசிய பேரழிவின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர். கிழக்கில் காலநிலை சீர்கேட்டால் மற்றொரு அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், தம் உறவுகளையும், இழப்புக்களையும் நினைவுகூர மக்கள் தயங்கவில்லை. கிழக்கில் சுனாமி நினைவுதினமான நாளை காவு கொள்ளப்பட்ட மக்களுக்காக ஆலயங்களில், விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளதுடன், சுனாமி உயிரிழப்பு நினைவுத்தூபிகள் அமைந்துள்ள இடங்களில், சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவும், நினைவுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 முஸ்லிம்கள் 
கிழக்கில் சுனாமியால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் காவுகொள்ளப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் நாளை பல நினைவு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. சுனாமியில் மரணித்த முஸ்லிம்களுக்காக, அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்களது ஆத்ம சாந்திக்காக விசேட துஆ பிராத்தனைகள் இடம் பெறவுள்ளன. அத்துடன் பள்ளிவாசல்கள், பொது இடங்ககளில் கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படவிருப்பதுடன், கந்தூரி எனப்படும் அன்னதானம் வழங்கள், இரங்கல் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன. 

நானும் ஒருவன் இந்த நிலையில் சுனாமி அனர்த்தத்தினால் நான் பாதிக்கப்பட்டு அன்று குடும்பத்துடன் அகதியாக்கப்பட்ட நிர்க்கதி நிலையையும் இக்கட்டத்தில் எண்ணிப்பார்க்கின்றேன். அன்று கிளிநொச்சியிலிருந்து வந்து கல்முனையில் தங்கியிருந்த நண்பர்களை மதிய உணவு விருந்துக்கு அழைத்திருந்த நிலையில், சமைப்பதற்கு கோழி இறைச்சியை வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தேன். உடல் முழுவதும் சவர்க்காரம் போடப்பட்ட நிலையில் கதவில் தட்டிய மனைவியின் அவலக்குரல் அப்பொழுது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "கடல் பொங்கி வருகுது வெளியே வாங்கோ!..” என்ற மனைவியின் குரல் உடம்பு முழுவதும் போடப்பட்ட சவர்க்காரத்தைக் கழுவவேண்டுமென்ற மனநிலையைத் தரவில்லை. மேலே கொடியில் கிடந்த துவாயை உடம்பிலுள்ள சவர்க்காரத்தின் மேல் கட்டிக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்ததும் கையைப் பிடித்துக் கொண்டே மனைவியுடன் ஓடினேன். உடலெல்லாம் சவர்க்கார நுரை, வெறும் துவாயை மட்டும் கட்டிக்கொண்டு இவர் ஓடுகிறாரே என கண்ட என் அயலாவர்கள் பலரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்து தப்பியதை பின்னர் அவர்கள் கூறினர். எமது வீட்டு உடமைகள், சொத்துக்கள், பணம், நகை, கார், மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் சுனாமி விழுங்கியதை அப்போது தாங்கிக் கொள்ள முடிந்தாலும், அன்று சுமார் 30 வருட பத்திரிகைத்துறை ஆவணங்கள், செய்திகள், கட்டுரைகளின் நறுக்குகள், முக்கிய படங்கள் என்பனவற்றையெல்லாம் இழக்க நேரிட்டதைத் தாங்க முடியவில்லை. “மட்டக்களப்பு ரயில்பாதை நிந்தவூரைத் தொடவேண்டும்" என்ற தலைப்பில் பல வரலாற்று சான்றிதழ்களுடன் 'சிந்தாமணி' வார இதழில் நான் எழுதிய கட்டுரை நறுக்கை மட்டும் ஒருவாரத்தின் பின்னர் தொட்டாலே உதிரும் நிலையில் கண்டெடுக்க முடிந்தது. சுனாமி தந்த பல வருட அகதி வாழ்க்கை, ஊடகவியலாளனை கறிவேப்பிலையாக மட்டும் பயன்படுத்தும் பிரகிருதிகள், உண்மையான நண்பன், அனுதாபி யார் போன்ற பலபடிப்பினைகளை அனுபவித்தேன்; பல திருப்பு முனைகளைச் சந்தித்தேன். 

வடுக்கள்

 சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகள், கட்டடங்களின் வடுக்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேங்களில் இன்னும் எலும்புக்கூடுகள் போல் காணப்படுகின்றன.

" நன்றி - மலரும்  . கொம் "

கருத்துரையிடுக

 
Top