பணத்துக்கு சோரம் போகும் பிச்சைகார அரசியல் வாதியல்ல நான் .............
இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எடுக்க இருக்கின்ற நிலைப்பாடு சம்பந்தமாக தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தவன் என்ற ரீதியில் எனது நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

கட்சியினால் நடத்தப்பட்ட கூட்டங்களில் மக்களின் விருப்புக்கும். அபிலாசஷகளுக்கும் ஒத்ததாக முடிவு எடுக்கப்பட வேண்டும்; என்பதை வலியுறுத்தி வந்தவன் நான்;. அதேநேரம்' பகிரங்கமாகவும் கடுமையாக இந்த ஆட்சியாளர்கள் செய்து வரும் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டித்து வருபவன். இது சம்பந்தமாக கடுமையாக என்னால் அறிக்கைகள் விட்டதை நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அரசுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பலர் கட்சிக்குள் வாதிட்டனர். நான் மக்களின் விருப்புக்கும், அபிலாசஷக்கும் ஏற்றவாறு முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டேன். இதனால் இந்த அரசுக்கு எதிராக கட்சிக்குள் பேசியவன் என்பதாலும் காட்டமாக கதைத்து வருவதனாலும் அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு சிலர் அரசின் முக்கிய உயர்மட்டத்தவர்களை சந்தித்து எனக்கெதிராக அபாண்டங்களைக் கூறியுள்ளனர்.

அதாவது அரசை கவிழ்ப்பதற்காக வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளோடு இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்சபீட உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கி அவர்களை வளைத்து ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலில் அழிப்பதற்கு செயற்படுகின்றேன் என்றும் அதேபோன்று நான் முஸ்லிம் மக்களை அரசுக்கு எதிராக ஊடகங்களில் மாற்றியமைத்து வருகின்றேன் என்றும் பெரும் ஒரு புகாரை செய்துள்ளனர்.

அதனால் எனது அரசுக்கு எதிரான தீவிர நடவடிக்கையை கட்டுப்படுத்தவதற்கு சில ஆலோசனைகளும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக கல்முனை நகரின் பசார் பிரதேசத்தை இரண்டு துண்டாக்கி சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் என்னை சிக்கலுக்குள் ஆக்க முடியும் என்பதை அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்ததை என்னால் அறிய முடிந்தது. 

இதனால் உடனடியாக செயற்பட்டு இந்த சதி நாசகார வேலையை கட்டுப்படுததுவதற்காக கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அடிப்படையிலும் சக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை தொடர்பு கொண்டு கல்முனை நகரின் கட்டுக்கோப்பும்; இன ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்க அவரை வேண்டி அவரை தனியாக சந்தித்தேன். அதில் வேறு எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

மேலும் அந்த சந்திப்பில் நான் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும், பொது பல சேனாவின் நடவடிக்கைள் தொடர்பாகவும் முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளார்கள் என்பதையும் கூட்டங்களில் பேசி அறிக்கைள் விட்டதும் உண்மை. ஆனால், தனிப்பட்ட ரீதியில் உங்களது குடும்பத்தை பழி தீர்ப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் காய்நகர்த்தல்களை செய்து வருகின்றேன் என்ற விடயம் முற்றிலும் பொய்யானது என்று தெளிவுபடுத்தி கல்முனை நகரில் ஏற்படவுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தி நகரில் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எங்களின் கட்சித் தீர்மானம் என்பது கட்சியின் உச்சபீடம் எடுக்கும் முடிவாகும். அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட ரீதியில் இயங்க முடியாது என்பதையும் தெளிவாக விளங்கப்படுத்தினேன்.

மேலும் நாமல் ராஜபக்ஷ அவர்களை சந்தித்த விடயம் என்னைப் பொறுத்தமட்டில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே நடந்த ஒன்றாகவே பார்க்கின்றேன். குறிப்பாக இது ஒரு தேர்தல் காலம் என்பதனால் அவரது அலுவலகத் தொகுதியில் ஏனைய அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இருந்தபோதும் என்னிடம் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இருந்ததால் கல்முனை விடயம் தொடர்பாக பகிரங்கமாகவே அவரை நான் சந்தித்திருந்தேன். வேறு உள்நோக்கம் எனக்கு இருந்திருந்தால் வேறு மறைவிடங்களில் அல்லது ஹோட்டலில்களில் நான் சந்தித்திருப்பேன்.

மேலும் அமைச்சர் பசீல் ராஜபக்ஷவினதும் நாமல் ராஜபக்ஷவினதும் காரியாலயங்கள் அலரி மாளிகையில் காணப்படுவதால் எமது சமூகத்தின் பல்வேறுபட்ட தேவைகள் தொடர்பாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சந்திப்பது வழமை.

குறிப்பாக அண்மையில் சிகிரியாவில் பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டபோது அந்தக் காரியாலயத்தில்தான் அமைச்சர் பசீல் ராஜபக்ஷ அவர்களை சந்தித்து மாணவியை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததை பகிரங்கமாகவே நான் குறிப்பிட்டு அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்திருந்தேன்.

பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்; கல்முனை மக்களுக்கு பெரும் அநீதி ஏற்படுவதை இந்தக் காலகட்டத்தில் அனுமதிக்க முடியாது. இந்த அநீதியை ஏற்படுத்துவதற்கான துரோகத்திற்கு தூண்டு கோலாக இருப்பது யார்? யார்? என்பதை மிக விரைவில் பகிரங்கப்படுத்துவேன். இதனை இன்றைய காலகட்டத்தில் அரசுக்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட சிலர் எனது மக்களின் உணர்வாக நான் பேசுவதை தடுப்பதற்காக இன்று எனக்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

இதைக்கண்டு நான் பயப்படவில்லை. ஏனென்றால் எனது நிலைப்பாடு இன்றும்கூட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றேன். இதை நேற்றும் கூட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதும் வலியுறுத்திக் கூறியுள்ளேன்.

எனவே கட்சியின் இறுதித் தீர்மானம் எடுக்கின்ற உச்சபீடக் கூட்டம் ஒரீரு நாட்களில் நடைபெறவுள்ளது. அதில் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் யார் யார் மக்களின் உணர்வோடு நின்று பேசப்போகின்ரார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

அதன் பின்பு இன்னும் பல இரகசிய விடயங்களை இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக மக்களிடம் பகிர்ந்து கொள்ள தயாராகவே இருக்கின்றேன். ஒரீரு தினங்களாக என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் என்னுடைய சமூகப் பணிக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு புதிய புதிய பிரச்சார உக்திகளை பிராந்திய அரசியல்வாதிகள் தங்களது எடுபிடிகளைக் கொண்டு கையாண்டு வருகின்றனர்.

மேலும் இன்று டீல் கதைகளைக் கதைக்கின்றார்கள். நானோ எனது குடும்பமோ அரசியல் ரீதியாக சமூகத்தை விற்றுப் பிழைத்து டீல் செய்து பிழைக்க வேண்டிய அவசியமில்லை. இது எனக்குப் பழக்கமும் இல்லை. 

இவ்வாறு டீல் செய்து பெரும் பணகாரர்களாகியவர்கள்தான் இன்று டீல் சம்பந்தமாக என்மீது குற்றம் சுமத்கின்றார்கள். எனவேதான் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இந்த நிமிடம் வரை அரசியலுக்காக டீல் செய்து இந்த சமூகத்தையும் கட்சியையும் காட்டிக் கொடுத்து பத்துச் சதமாவது நான் பெறவில்லை என்பதை என்னைப் படைத்த அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை ஒன்று உருவாகுவதை தடுப்பதற்காக சென்றேன் என்றும் என்மீது இன்று பழியை சுமத்தியுள்ளனர்.சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளுராட்சி சபை உருவாக வேண்டும் என்பதில் முதல் விருப்பம் கொண்டவன் நான் என்பதை அந்த மக்களும் பள்ளிவாசல் நிர்வாகமும் நன்கு அறியும்.

இந்த விடயத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கும் இன்றும் நான் பக்கபலமாக இருப்பேன் என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனவே இன்று இந்நிகழ்வின் பின்பு சில அரசியல்வாதிகள் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளார்கள் என்பதை இந்த நேரத்தில் அறிந்து கொண்டதுடன் இவர்கள்தான் அரசுக்கு சார்பாக கட்சி முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடுகின்றவர்கள். அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார்? யாரை சந்தித்துள்ளார்கள் என்பதையும் என்னன்ன விடயங்களை பேசியுள்ளார்கள் என்பதையும் நான் அறிந்துள்ளேன். இந்த விடயம் சம்பந்தமாக மிக விரைவில் உண்மைகளை வெளியிடுவதற்குத் தயாராக உள்ளேன்.

எனவே அரச சார்பு நிலை எடுத்துள்ளேன் என்ற தீவிர பிரச்சாரம் முற்று முழுதாக பொய்யாகும் என்றும் இது தொடர்பான செய்திகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கருத்துரையிடுக

 
Top