சுரேஸ்

கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வந்த யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பின்னர் தங்களின் சொந்த பிரதேசத்திற்கு வந்துள்ள மக்களில் பலர் சில பிரதேச செயலக பிரிவுகளில் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலையில் விரக்திமிக்க வாழ்க்கை நடாத்துவதாக தன்னிடம் முறையிடுகின்றனர் என  மட்டக்களப்புசிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார் 
போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களது வழ்க்கைத் தரம் வாழ்வாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு அமையவும் அவர்கள் சிவில் பிரஜைகள் சபையிடம்  முறையிட்டுள்ளமை தொடர்பாகவும் அவர்  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்  அவர்  இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில்……

கடந்த மூன்றுதசாப்தங்களாகநடைபெற்றுவந்த போராட்டத்தில்  வன்னிப் பிரதேசத்திற்கு சென்று வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்த வீடு ,வாசல்,உடமைகளை இழந்து இடம் பெயர்ந்து கிழக்குமாகாணத்தின் பலபிரதேசங்களில் நிற்கதியாக தற்காலிக கொட்டில்களில்  வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர் .
பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களினால் வழங்கப்பட்டுள்ள உதவிகள் பலருக்கு வெறும் கண்துடைப்பாகவே வழங்கப்பட்டுள்ளன. சொந்த கிராமத்திலேயே அரச அதிகாரிகளினால் மற்றும் அயலவர்களினால் புறக்கணிப்பு. புனர்வாழ்வு பெற்றும் தருவதாகக் கூறிய வங்கிக் கடன் வழங்கப்படாத நிலை. அரச தொழில் வாய்ப்புகளையும் பெறமுடியாத ஏழ்மை. உடல்களில் சுமந்து நிற்கும் விழுப் புண்களின் பாதிப்பு. மருத்துவ சான்றிதழ்கள் தானும் பெறமுடியாத நிலை. பிள்ளைகளின் கல்விக்கு செலவிட போதுமான வருமானமின்மை. முன்னாள் போராளிகள் என்று தொழில் ரீதியாகத்தானும் உதவ எவரும் முன்வராமை. தொலை தூரங்களுக்கு தொழில் தேடிச் செல்லமுடியாத வகையில் தொடர் பாதுகாப்பு கண்காணிப்பு. இதனால் தற்போதுள்ள விலைவாசி உயர்வால் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு செல்வது முடியாதநிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விரக்தியுடன் வாழ்கின்றனர். தங்கள் வாழ்வில் சந்திக்கக் கூடாத அவலங்களைச் சந்தித்தும், தியாகங்களைச் செய்தும் சொந்த கிராமங்களுக்கு வந்துள்ள போதும் இதுவரை எந்த ஒரு அதிகாரியோ, அரசியல்வாதியோ  தங்களின் குடும்ப நிலையை இதுவரை வந்து விசாரிக்கவில்லை என குறைப்படுகின்றனர் .அவர்கள் குடும்பத்தில் அன்றாட அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி ,மலசல கூடம்,கல்விக்கானஉதவிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் என எதுவும் நேர்மையான முறையில் கிடைக்க பெறுவதில்லை எனஅம்மக்கள் சிவில் பிரஜைகள் சபையிடம் முறையிடுகின்றனர் .
ஆகவே இது தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இவ்விடயங்கள் சம்மந்தமாக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர்களுக்கு கிடைத்துள்ள பதவிகள் தீர்மானம் மேற்கொள்ளவும், அதிகாரத்தை பிரயோகிக்கவும், சலுகைகளையும், நன்மைகளையும் அனுபவிப்பதற்காக மட்டுமல்ல, நிலவும் குறைபாடுகளுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கும் தான் என கமலதாஸ் கருத்துத் தெரிவித்தார் .

முடிந்த அளவுக்கு அரசு இக்குடும்பங்களில் ஒருவருக்குத் தானும் ஒரு அரச உத்தியோகம் என்ற அடிப்படையில் தொழில் வழங்கினால் அவர்களின் மன மாற்றத்திற்கு அது பேருதவியாக விருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

 
Top