கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட கரையோர மாவட்ட பிரேரணை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய​க் கூட்டமைப்பி​ன் உறுப்பினர்க​ள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


கல்முனை மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட கரையோர மாவட்டம் அமைப்பது சம்மந்தமான பிரேரணை தொடர்பில் கல்முனை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாண்டிருப்பில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் ஜெயக்குமார், கமலதாசன், விஜயரெட்னம் ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன்,

தமிழ் பேசும் மக்களின் நிலையான தீர்வு என்ற விடயத்தில் எமது தலைமை அன்றிருந்து இன்று வரைக்கும் மிகவும் உறுதியாக இருந்து வருகின்றது என்பதனை தமிழ்த் தேசியத் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கூடி பேசும் இடங்களிலெல்லாம் வலியுறுத்திக் கொண்டே வருகின்றார்கள் என்ற கருத்தினை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை புரிந்து கொள்ள மறுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது தேவைகளுக்காக எமது தலைமைகளையும் சில இடங்களில் பாவிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
குறிப்பாக காரைதீவு காணிப் பிரச்சினையில் எமது தலைமை கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்ததாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இவ்வாறான கருத்துக்கள் மூலம் இரண்டு சமூகங்களிடையேயும் முரண்பாடுகளை தோற்றுவித்து அவர்களது எதிர்கால அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
அண்மைக் காலங்களாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் தமிழ், முஸ்லிம் உறவை பாதிக்கும் செயற்பாடாகவே உள்ளது.
அதில் ஒருகட்டமாகவே கல்முனை மாநகரசபையில் கொண்டு வரப்பட்ட கரையோர மாவட்ட பிரேரணையாகும்.
இந்தப்பிரேரணையை எமது கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் நான்கு பேரும் எதிர்திருக்கின்றார்கள். இதனை நாங்களும் வரவேற்கின்றோம். காரணம் இன்றைய தேவை எம்மைப் பொறுத்தவரையில் நிரந்தரத் தீர்வு. இந்த நாட்டிலே வடகிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்பதே அந்த நிரந்தரத்தீர்வாகும்.
அவ்வாறான சூழல் வருகின்ற வேளையில் நிச்சயமாக இந்த நாட்டிலே முஸ்லிங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என பதில் எமது தமிழ்த் தலைமைகள் உறுதியாக இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனை தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த நினைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
எமது கட்சியான த.தே.கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் பல சுற்று சந்திப்புக்களை அம்பாறை மாவட்டத்தின் நிலைமைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எடுக்கப்பட்ட எந்த ஒரு சிறு தீர்மானங்கள் கூட இது வரை முஸ்லிம் அரசியல்வாதிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை
இவ்வாறுதான் இவர்களது செயற்பாடு இருந்து கொண்டிருக்கின்றது.


அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் தமிழர்களுக்கென்று தனியான பிரதேச செயலகம் அமைய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பேசி வருகின்றோம்.
இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாகவே இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இச்செயற்பாடானது ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் செய்யும் ஒரு துரோகமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
தற்போது பிரதேச செயலக கதையினை விடுத்து நான்கு பிரதேச சபை தொடர்பான கருத்துக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மேலும் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடாகவே உள்ளது எனத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன்,
கல்முனையில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதையும் கொடுப்பதற்கு தயாரில்லை.
அண்மைக்காலங்களாக தமிழர் பிரதேசங்களுக்கு உரித்துடைய வீதிகள், வாசிக சாலையின் பெயர் மாற்றத்தினை முன்னெடுத்தது வருகின்றார்கள். இச்செயற்பாடானது, தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வினை மேலும் அதிகரிக்க வைக்கும் நடவடிக்கையாக இருக்கின்றது.
சுனாமிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட கிராமமான இஸ்லாமாபாத் முஸ்லிங்களுக்காக மாத்திரம் அமைக்கபட்டது அல்ல. மாறாக அதில் தமிழர்களும்தான் வாழ வேண்டும் என்றுதான் வெளிநாட்டில் இருக்கும் தமிழர் பணத்தினை பேரியலிடம் கொடுத்தார்.
ஆனால் அது இப்போது முஸ்லிங்களுக்கு மாத்திரம் அமைக்கப்பட்ட ஒரு இடமாக மாற்றமடைந்து இருக்கின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதில் முன்னின்று உழைத்து வருகின்றார்கள். இவர்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நினைத்தால் எங்களது தமிழ்ப் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தித்தர முடியும்.
ஆனால் அதனைப் பற்றி இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். நாங்கள் ஏனைய இனங்கள் போன்று சுதந்திரமாக வாழ நினைக்கின்றோம் இதனை புரிந்து கொண்டு அனைத்து முஸ்லிம் தலைமைகளும் செயற்பட வேண்டும்.
கல்முனை பிரதேச செயலக விடயத்தில் நாங்கள் பல சோதனைகள், வேதனைகளை தாங்கி வருகின்றோம். தற்பொழுது தமிழ் பிரிவு பிரதேச பிரிவில் 31 கிராம சேவகர் பிரிவு இருந்தது. ஆனால் இரண்டு கிராம சேவையாளர் பிரிவினை காணவில்லை. ஏன் இவற்றினை மேற்கொண்டு வருகின்றனர். தாங்கள் எதனையும் கல்முனையில் செய்யலாம் என்ற நிலைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம்,
கல்முனை பகுதி தமிழர்களின் பூர்வீகம். இப்பகுதியை மற்றொரு இனத்திற்கு விட்டுக்கொடுக்க கல்முனை வாழ் தமிழ்மக்கள் எந்த விதத்திலும் தயாரில்லை என்பதனை கல்முனை மாநகர சபை மேயர் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்முனை என்பது தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசம். இன்று கல்முனைக்கு அப்பால் கரவாகு என்ற பகுதி அழித்தொழிக்கப்பட்டு, அங்கு அங்கிருந்த மூன்று இந்து ஆலயங்களும் அழிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அங்கிருந்த தமிழ்ப் பாடசாலைகளும் அழிக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டமையினால் கல்முனை பாண்டிருப்புப் பகுதிகளிலே வாழ்ந்து வருகின்றனர். கரவாகு என்ற இடம் கல்முனைக்குடியாக மாற்றப்பட்டு இருப்பதுடன் அந்தக் கல்முனைக் குடியினை கல்முனை என்று அழைக்கின்றனர் அதன் நோக்கம் என்ன என்று எமக்குப் புரியவில்லை.
கல்முனை மாநகர சபையில் இதுவரைக்கும் பலர் முதல்வராக இருந்திருக்கின்றனர். ஆனால் இன்று இருக்கும் முதல்வர் தமிழர்களின் பூர்வீகத்தை கபளிகரம் செய்வதும் தமிழ் மக்களுக்கு அநீதி செய்வதுமாகவே இருக்கின்றார். தமிழர்களின் பூர்வீகமாக இருக்கும் கல்முனையினை இன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாக காட்டப்படுகிறது.
அதாவது தமிழர்களை அந்த நிலப்பரப்பில் இருந்து சிறுபான்மையினராக்கி கல்முனை என்பது முஸ்லிம்களின் பூர்வீகமாக காட்ட முனைவது வியப்பான விடயமாகும்.
கல்முனையில் இருக்கின்ற வர்த்தக நிலையத்தினைக் கொண்டு கல்முனை முஸ்லிம்களினுடையது என்றால் எவ்வாறு ஏற்பது? கல்முனை தமிழர்களின் பூர்வீகம் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு அதில் ஒன்று கல்முனை வெளிக்கண்டத்தில் 900 ஏக்கர் காணி தமிழர்களுக்கு இருக்கிறது.
1961 ஆண்டு அம்பாரை மாவட்டம் உருவாக முன்னர் கல்முனையில் பல வர்த்தக நிலையங்கள் தமிழர்களுக்குடையதாக இருந்த போதும், அக்காலத்தில் அரசியல் பலம் குன்றிய நிலையில் சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமையினாலும் கல்முனையில் வியாபாரம் செய்ய முடியாதும் வேறு தொழில் செய்ய முடியாதும் தமிழர்கள் இருந்தபோது வந்து சேர்ந்தவர்களே முஸ்லிங்கள் எனத் தெரிவித்தார்.
ஏனைய கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றோம்.
இந்தநிலையில், இதனை மாற்றியமைப்பதற்காக அமைச்சர் அதாவுல்லா கல்முனையில் பிரதேச சபை அமைக்க வேண்டும் எனும் திட்டத்தினை கொண்டுவந்து எமது தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்மந்தமான எங்களது பல நெடுங்கால கோரிக்ககையை சிதறடிக்க வைப்பதற்கு முயற்சிக்கிறார்.
அதன் முதற்கட்டமாக கல்முனை சிவில் சமூகம் என்ற போர்வையில் அரசாங்கத்தின் பக்கம் செயற்பட்டு வருகின்றவர்களையும் பியசேனா பாராளுமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைத்து பேசி இருக்கின்றார்.
இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காரணம் நாங்கள் தான் கல்முனை மாவட்ட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள். எங்களுடன் தான் இதனை பேசியிருக்க வேண்டும்.
மாறாக அவருடன் பேசுவதும் சாத்தியமற்றது மற்றும் பியசேனா தமிழ் மக்களின் பிரதிநிதியில்லை என்பதனை கல்முனையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெளிவாக ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார். எனவே தமிழ் மக்கள் சார்பாக அவரை அழைக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top