(அகமட் எஸ். முகைடீன்)

சாய்ந்தமருது பீச் பார்க்கின் அவல நிலை தொடர்பாக குறித்த பீச் பார்க் திட்டத்தினை ஆரம்பித்து வைத்த  காரண கர்த்தாவும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் கல்முனை மாநகர முதல்வராக மக்களின் ஆணை பெற்று செயற்பட்டபோது கல்முனை மாநகர பிரதேச வாழ் மக்களின் வேலைப்பழு மிக்க சூழலில் மன அழுத்தங்களை களைவதற்கு ஏதுவாக சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய ஒரு நவீன பீச் பார்க் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டேன். குறித்த பீச் பார்க் கிழக்கு மாகாணத்திலே சிறந்த ஒரு பீச் பாக்காக அமைய  வேண்டும் என்பது எனது கனவாகவும் பிராத்தனையாகவும் இருந்தது. அந்தவகையில்  17 பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் மிக சிறந்த ஒரு திட்டத்தினை வரைந்து ஒருகோடி 67 இலச்சம் ரூபா செலவில் அமைப்பதற்கான அங்குரார்பன நிகழ்வு எனது தலைமையில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்ஏ.நிசார்டீன் மற்றும் மாநாகர சபை பொறியியலாளர் ஹலீம் ஜெளசிசாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உள்ளிட்ட பலரின் கலந்து கொள்ளுதலுடன் நடைபெற்றது.
நெல்சிப் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிர்மானப் பணிக்கான முதல் கட்ட ஒதுக்கீடாக 67 இலட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள்  நடைபெற்றபோது காழ்ப்புனரச்சி கொண்ட உள்ளூர் அரசியல் வாதி கரையோர பாதுகாப்பு அதிகாரியினை தனது கைக்குள் வைத்துக் கொண்டு தடைகளை ஏற்படுத்தி,  அந்த அபிவிருத்தியினை முடக்குவதற்கு பல் வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டா​ர். அத்தடைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்  கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் நிர்வாக சபை கட்டிடத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்,ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள்,சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்கள்கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலருடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தீர்வு  காண முயற்சித்தேன். அது மாத்திரமல்லாது எனது வாழ் நாளில் ஒருபோதும் நீதி மன்றம் சென்றிராத நிலையில் குறித்த பீச் பார்க் கட்டுமானத்திற்காக நீதி மன்றம் செல்ல நேரிட்டது. எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு நீதி தேவதை கண்விழித்தமையினால் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தேன்.
எனக்கிருந்த சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி இரண்டாம் கட்டமாக ஒருகோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்தேன். இருந்தபோதிலம் கட்டுமானப் பணிகளை சுய நலன்களுக்காக காலதாமதப் படுத்துவதில் குறித்த உள்ளூர் அரசியல்வாதி முனைப்புடன் செயற்பட்டதனால் இரண்டாம் கட்டவேலையினை ஆரம்பிப்பதற்குள் எனது பதவிக் காலம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பீச் பார்க் கட்டுமானப் பணிகளை பூர்த்தி  செய்ய  முடியவில்லை. எனினும் எனக்கு பின்னர் வருகின்ற முதல்வரினால் எனது கனவிற்கு அமைய குறித்த கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை  வேண்டி இருந்தேன்.
ஆனால் இன்று இந்த பீச் பார்க்கின் நிலை அந்தோ பரிதாபம். சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரனங்கள் இந்தியாவிலிருந்து தருவிக்க எண்ணியிருந்தேன். இப்போது நான்கு தூன்களையும் இரண்டு இருக்கைகளையும் கட்டிவிட்டு. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணமும் இல்லை, எதுவும் இல்​லாத நிலையில் பொழுது போக்கு  பூங்காவாக இன்று (23.10.2014)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துஅவசர அவசரமாக குறைமாதக் குழந்தையாய் அங்கவீனமான முறையில் வலுக்கட்டாயமாக பிரசவிக்கப்படுகிறது சாய்ந்தமருது பீச் பார்க். நினைக்கும் போது இதயம் கனக்கிறது. ஏன் இந்த அவசரம்? சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி மன்றம் அடுத்த மாதம் அளவில் அறிவிக்கப்படவிருக்கும் இத்தருனதில் எடுக்கும் இந்த முயற்சி ஏன் என்பது உள்ளங்கை  நெல்லிக் கனியாகும்.
பீச் பாரக் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் பெயர்கள் தற்போது நினைவுப் படிகத்தில் என்ன வேடிக்கை இது. குறித்த அபிவிருத்தியில் ஒரு வீதமேனும் பங்களிப்புச் செய்யாதவர்களின் பெயர்கள் இன்று சரித்திரப் பதிவில். ஆனால் குறித்த அபிவிருத்தி திட்டத்தில் அக்கறையுடன் இணைந்து செயலாற்றிய முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பெயர் அந்த படிகத்தில் இல்லை. இதுதான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் அவல நிலை. கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. ஆனால் அவர்கள் மக்களை ஒற்றுமைப்படுத்த நினைக்கிறார்கள். இன்று முஸ்லிம் காங்கிரஸ் வெட்டுக் குத்துக்கு பிரசித்தி பெற்ற ஒரு கட்சியாக அமைந்துள்ளது. இதுதான் அக்கட்சியிலிருந்து  நான் வெளியேறவும் காரணமாக அமைந்தது. குறித்த ஒரு அபிவிருத்தி வேலையினை ஒருவர் ஆரம்பித்தால் அதோடு இணைந்து செல்லாமல் ஒருவரை ஒருவர் வெட்டுகின்ற கலாச்சரத்தையும் அணுகுமுறையினையும்  கோட்பாடையும் கொண்ட ஒரு கட்சியாக காணப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் குறைமாத வலுக்கட்டாய பீச் பார்க் பிரசவத்திற்கு குறித்த கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்கள்  பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். இவர்களின் இந்த கபட நாடகத்திற்கு இறைவன் தகுந்த பாடம் புகட்டுவான். சாய்ந்தமருதிற்கான உள்ளூராட்சி மன்றம் மலர்ந்ததும் குறித்த பீச் பார்க்கினை எனது கனவிற்கும் பிரார்த்தனைக்கும் அமைவாக இறைவனின் துணை கொண்டு என்னுயிரிலும் மேலான என்னகத்தே குடி கொண்டுள்ள கரையோர பிரதேச வாழ் மக்களுக்காக செய்வதற்கு என்னால் முடிந்த பல வழிகளிலும் முயற்சி செய்வேன் என்ற செய்தியினை இத்தருணத்தில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
17 பொறியியலாளர்களினால் வரையப்பட்ட முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிக் கனவான பீச் பார்க்கின் வரைபடம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது

திட்டமிடப்பட்டிருந்த சிறுவர் பூங்காவின் வரை படம் 

கருத்துரையிடுக

 
Top