( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இலங்கை முஸ்லீம்களின் தேசிய சொத்து என வர்ணிக்கப்படும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் நோக்கில் கட்டாரில் தொழில் புரியும் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பழைய மாணவர் சங்க கிளையொன்றினை கட்டார் நாட்டில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்துள்ளனர்.
எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு கட்டாரிலுள்ள BCAS CAMPUS இல் இரவு விருந்துடன் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் கட்டாரில் தொழில் புரியும் சகல கல்லூரி மாணவர்களும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமது வருகையினை+974 5514 3713 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லதுQatar@kalmunaizahiraoba.lk என்ற இணையத்தள முகவரியுடனோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பழைய மாணவர் சங்கத்தில் இணைவதற்கான விண்ணப்பப்படிவமும் கல்லூரியின் சின்னம் பொறிக்கப்பட்ட  T – SHIRT உம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அண்மைக்காலமாக கல்லூரியின் புகழ் கல்வி , விளையாட்டு மற்றும் புறக்கிருத்திய செயற்பாடு என்பவற்றில் மேலோங்கிக் காணப்படுகின்றது. கல்லூரியின் புதிய அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீனின் தலைமையின் கீழ் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா ஊழியர்கள் , பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பெற்றோர்கள் , அரசியல் பிரமுகர்கள் ,கல்விமான்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பெரும் பங்களிப்புடன் புதிய மாற்றத்துடன் கல்லூரியின் செயற்பாடுகள் மிகவும் திறமையாக அமைந்துள்ளது.
கடந்த இரு மாதங்களுக்குள் தேசிய ரீதியில் ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைத் தோற்கடித்து அகில இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டமை , தேசிய ரீதியில் ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடாத்திய தகவல் தொழில்நுட்பப் போட்டியில் மூன்று விருதுகளைப் பெற்றமை , 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் முதலாம் , இரண்டாம் இடங்களைப் பெற்றமை என்பன கல்லூரியின் பெயரை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளங்கச் செய்துள்ளன.
இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் வருடம் தோறும் அதிகளவில் முஸ்லிம் மாணவர்களையும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து கணிசமான தொகை தமிழ் மாணவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் இக்கல்லூரியின் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் பழைய மாணவர்களின் பங்களிப்பு பெரிதும் தேவைப்படுகின்றமையால் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தாய்க்கிளை , பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை என்பன பல்வேறுபட்ட உதவிகளை கல்லூரிக்கு தற்போது வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கல்லூரி எதிரவரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அகவை 65 இல் காலடி வைக்கின்றது.

கருத்துரையிடுக

 
Top