மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்று கூறப்படும் குருக்கள் மடம் பிரதேசப் பகுதியை தோண்டும் நடவடிக்கை அடுத்த மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
குருக்கள் மடத்தில் புதைகுழி இன்று தோண்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் புதைகுழியைத் தோண்டுவதற்கு கால அவகாசம் தேவை என்று நீதிமன்றிடம் கோரியதையடுத்து அந்தப்பணிகள் பிற்போடப்பட்டுள்ளன. 

1990 ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடியை நோக்கி சென்ற முஸ்லிம்கள் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி படுகொலை செய்யப்பட்டு கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டனர் என்று முறைப்பாடு செய்யப்பட்டு, குறித்த இடத்தை தோண்டுவதற்கும் அனுமதி கோரப்பட்டது. 
குறிப்பிட்ட இடத்தை இன்று செவ்வாய்க்கிழமை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் கடந்த மாதம் 23ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

 அந்த இடத்தைத் தோண்டுவதற்குரிய ஏற்பாடுகள் இல்லாததாலும், கொழும்பிலிருந்து சட்ட வைத்திய நிபுணர் அழைத்துவரப்பட வேண்டும் என்றும் தோண்டுவதற்கான உபகரணங்கள் மற்றும் ஆட்கள் இல்லை என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர். இதன் காரணமாகவே தோண்டும் பணி பிற்போடப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top