மண்சரிவு, வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்கள், விபத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்கவும் உடனடி உதவியைப் பெறவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை நேற்று அறிமுகம் செய்தது.
117 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் உடனடியாக உதவியை பெற முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பிரதமர் டி. எம். ஜயரட்ன இந்த அவசர தொலைபேசி இலக்கத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
சுனாமி பேரழிவு ஏற்பட்டு 9 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நோக்குடன் நேற்று களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தேசிய பாதுகாப்பு’ தினம் பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பிரதமர் டி. எம். ஜயரட்ன 117 என்ற இலக்கத்துக்கு முதலாவது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அனர்த்த முகாமைத்துவ அவசர தகவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு பேசினார்.
நாட்டில் எந்த பகுதியிலும் ஏற்படும் இயற்கை அனர்த்தம் விபத்துக்களை தெரியப்படுத்தியதுடன் அந்நிலையம் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு உடனடி உதவியையும் பெற்றுக் கொடுக்க ஆவனம் செய்யும். அத்துடன், ஊடகங்களுக்கும் தகவல்களை வழங்கும்.

கருத்துரையிடுக

 
Top