சுபைர்

முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்து வருகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான எமது கட்சியானது அரசாங்கத்தின் கூட்டு கட்சியாக இருந்து வருவதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் உட்பட ஏனைய அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்தின் வெற்றிக்காகவும் அரசாங்கத்தின் ஸ்த்திர தன்மைக்காகவும் பாடுபட்டு அரசாங்கத்தை வலுவடைய செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் அகில இலங்ககை முஸ்லிம் காங்கிரஸானது அரசாங்கத்தை வெற்றியடைய செய்ய கிழக்கு மாகாண சபை தேர்தலில் முனைப்புடன் செயலாற்றி வெற்றி கண்டது. 

இவற்றையெல்லாம் அரசாங்கம் கருத்திற் கொண்டு முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் தெளிவான ஒரு முடிவை எடுக்கும் என நான் நினைக்கின்றேன். எமது கட்சியை சேர்ந்த அமீர் அலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படல் வேண்டும். இல்லையேல் அதன் விளைவை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்பதை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

எமது கட்சி அரசாங்கத்தின் மீதான விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வருகின்றது என்பதை அரசாங்கம் விளங்கி கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் என்பது பொம்மையாக இருப்பதல்ல. கிழக்கிலுள்ள அனைத்து சமூகங்களையும் அரவணைத்து கிழக்கிலுள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் சேவையாற்றும் முதலமைச்சரே பொருத்தமானதாகும். இதற்கு தகுதியானவர் அமீர் அலி என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.

கருத்துரையிடுக

 
Top