ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுள் காணப்படுகின்ற உட்பூசல் காரணமாக பாதிக்கப்படுகின்றவர்கள் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந் மக்களே. இதற்கான முழுப் பொறுப்பினையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு கல்முனை மாநகரசபையின் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஸி.முபீத் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
 
 சில அரசியல் சக்திகளின் தான்தோன்றித்தனமான போக்குகளினாலும் கல்முனை பிரதேச அபிவிருத்தியினை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கல்முனை ஒருபோதும் அபிவிருத்தி காணக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. அரசுடன் அவ்வப் போது பங்காளிகளாக இணைந்து கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடும் ஜனாதிபதியோடும் அன்னியோன்யமாக வாழ்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனை பிரதேச மக்களை மட்டும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வெறுப்புள்ளவர்களாக தேர்தல் காலங்களில் காண்பித்து தமது அரசியல் இலாபத்தை அடைந்து கல்முனையின் அபிவிருத்திக்கு தொடர்சிசியாக ஆப்பு வைத்து வருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட கல்முனைக்கு விஜயம் செய்யவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பயணத்தை இரத்துச் செய்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பங்காளி கல்முனை பிரதேச மக்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்பதனையே இச்சம்பவங்கள் தெளிவு படுத்துகின்றன.
கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம கல்முனை மாநகரத்திற்கு வருகை தந்து கல்முனை மாநகரசபைக்கான புதிய கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்காக 200 மில்லியன் ருபாய்களையும் கல்முனை நகர அபிவிருத்திக்கு 150 மில்லியன் ரூபாய்களை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.
அந்த ஆளுநரின் உறுதி மொழியினை செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த மாபெரும் வரவேற்பு விழாவில் தெரிவிப்பதாகவும் இருந்தது. இந்த செயல் கௌரவ ஆளுநர் அவர்களை அவமதிக்கின்ற செயலாகவே நான் கருதுகின்றேன்.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள் அபிவிருத்தி காண வேண்டும் என்றால் இவ்வாறான சில்லறைத் தனமான சிந்தனைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் விட்டுக் கொடுக்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆறு வருட காலமாக கல்முனை மாநகரசபையில் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையில் இந்த வருடத்திலிருந்து கல்முனை மாநகரசபையில் ஒரு புதிய உதயத்தை கண்டிருக்கின்றேன். கௌரவ கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் மிகவும் உன்னிப்பாகவும் முயற்சியுடனும் திறமையாகவும் பல வேலைத்திட்டங்களை செய்து வருவதனை காணக்கூடியதாகவுள்ளது. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதேசங்கள் துரிதகதியில் அபிவிருத்தி காணவேண்டும் என்று சதா சிந்தனையுடன் தொழிற்படும் ஒரு இளம் அரசியல்வாதி. ஆனால் முதல்வரை சார்ந்த கட்சிக்குள் காணப்படும்  உட்கட்சிப்புசல் காரணமாக அவர்களின் பிரச்சினை இதுவரை காலமும் தீரவுமில்லை. தீரப்போவதுமில்லை. கல்முனை மாநகர சரித்திரத்தில் இதுவரை ( புதிய மேயரை தவிர) மூவர் மேயர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்கள் ஆட்சி புரியும் போதும் இதே பிரச்சினைகள் தான் தலைதூக்க ஆரம்பித்தன. கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு எவர் துணை நின்றாலும் அதற்று கட்சி , சாதி, மத , இன மற்றும் பிரதேசவாதமில்லாமல் நூறு வீத ஒத்துழைப்பை வழங்க நான் தயாராவுள்ளேன். நான் கடந்த 5 வருடங்களாக கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்து வருகின்றேன் . கல்முனை பிரதேச மக்கள் கடந்த கால யுத்தம் , சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் உடமைகளை இழந்து பொருளாதார ரீதியில்  மீள முடியாது தத்தளித்துக் கொண்டு தமக்காக கட்டப்பட்ட வீடுகளை பெறமுடியாத நிலையிலுள்ள இச் சந்தர்ப்பத்தில் இந்த கல்முனை மாநகர சபையால் இப்பிரதேச மக்களுக்கு என்ன சேவை நடந்துள்ளது என்பதனை மக்களே அறிவார்கள். இன்று மக்கள் மீது 10 தொடக்கம் 15 வீதமான வரிச்சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது . வெளிநாட்டு தூதுவர்கள் , உதவி செய்யககூடிய அரசாங்கம் சார்ந்த அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுணர் போன்றோர் கல்முனை மாநகர அபிவிருத்திக்கான நிதியினை பெற்றுத் தரும்போது  மக்களின் வரிச்சுமையினை பெருமளவு குறைக்க முடியும்.
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையும் மீன்பிடியினையும் வியாபாரத்தினையும் தொழிலாக கொண்டவர்கள் . கல்முனை் தொகுதியே ஒரு மாநகரசபையாக திகழ்கின்றது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீன் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரைக் கொண்டு நானும் கல்முனை மாநகர அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கின்றேன். அவ்வாறாக இருக்கின்ற போது கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிடைக்கவிருந்த 350 மில்லியன் ரூபா நிதியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டினால் நாங்கள் இழந்து விட்டோம். கிழக்கு மாகாண ஆளுணரின் வருகை கல்முனை மாநகரத்தில் அமையப்பெற்றுள்ள யு.எஸ்.எயிட் நிறுவன்தின் 2 கோடி ருபா நிதியுதவியில் கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலுள்ள 19 கடைத்தொகுதிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதோடு கல்முனை தனியார் பஸ் நிலையத்தினையும் திறந்து வைத்து கல்முனை மாநகர அபிவிருத்தியினை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் இங்கு விகிதாசாரம் என்ற ஒரு முறைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவோடு சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருசிலர் அவரது வார்ததைகளையும் கதைகளையும் நம்பி விகிதாசார அடிப்படையில் கல்முனை பஸ் நிலையத்திலுள்ள 6 கடைகளை தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஏனைய கடைகளை முஸ்லிம் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் விவாதத்தின் பின்னர் கடைகளை வழங்குவதற்காக திறந்த கேள்விப் பத்திரம் கல்முனை மாநகரசபையினால் கோரப்பட்டுள்ளது.
கல்முனை மாநகரசபை கடைகளை வழங்குவதற்காக திறந்த கேள்விக்கு விடும்போது தமிழ் , சிங்களம் , முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல்  எவரும் அக்கடையினை பெறுவதற்கு உரித்துடையவராகுவார்கள். அவ்வாறு ஏனைய கிராமத்தை சேர்ந்த மக்களும் அக்கடையினை பெற்றுள்ளார்கள். இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகரத்திற்கு கிழக்கு மாகாண ஆளுணரின் வருகையினால் கட்சி தலைமைக்கும் ஏனையவர்களுக்கும் வந்த பிரச்சினை என்ன ? என்ற கேள்வி என் மனதில் தோன்றியுள்ளது.
மாகாண ஆளுணர் எனப்படுபவர் அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரதிநிதியாவார். ஆளுணர் கிழக்கு மாகாணத்திலுள்ள எந்த பிரதேசத்திற்கும் வரலாம் போகலாம் அபிவிருத்தி செய்யலாம் இதனை தட்டிக் கேட்கவோ வருகையை தடுத்து நிறுத்த எவருக்கும் அதிகாரமில்லை.
அவர் ஒரு அரசியல் வாதியாக அல்லது ஒரு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துவராக இருந்தால் இவரின் வருகையினால் கல்முனை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு வாக்குப் பலம் அதிகரிக்கப்போகின்றது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப்பலம் குறைவடையப் போகின்றது என்ற காரணங்களினால் ஆளுணரின் வருகையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நிறுத்தியிருந்தால் இதைப் போன்ற மடத்தனமான செயல் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீன் அல்லது தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இத்திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டிருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தமது சுயநலத்திற்காக இவ்வைபவத்தை நிறுத்தியிருந்தால் அது நியாயம் என்று எண்ணலாம்.
ஆனால் இன்று அபிவிருத்தியின் நோக்கமாக கல்முனை மாநகருக்கு வருகைதர இருந்த ஆளுணரின் வருகையை தடுத்த நிறுத்த வேண்டிய தேவைப்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு இப்போது ஏற்பட்டுள்ளதற்கான காரணம் புரியாமல் இருக்கின்றது.
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமம் நற்பிட்டிமுனை. இந்த கிராமத்து மக்கள் நூறு வீதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கும் கிராமம் என்று மார்புதட்டி வாய் கிழிய பேசுகின்ற தலைமை கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் ஒரு தடவை கால் பதித்தவர் 2012 ஆம் ஆண்டுவரை இக்கிராமத்திற்கு வரவுமில்லை ,இக்கிராமத்திலுள்ள மக்களின் பிரச்சினை என்ன என்பதனை கேட்டறிந்து கொள்வுமில்லை கண்டு கொள்ளவுமில்லை.
இவர்கள் இக்குக்கிராமங்களை பற்றி சிந்திப்பதுமில்லை. கூட்டங்களில் அரசியல் காலங்களில் மக்களின் வாக்குகளை சுருட்டி செல்வதற்காக முஸ்லிம்களின் பிரதிநிதி தானைத்தளபதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்தவிதமான நியாயமுமில்லை. இவர்களின் சாக்கு போக்கான செயற்பாட்டினால் இன்று கல்முனை மாநகரத்தின் அபிவிருத்தி 15 வருடங்கள் பின்னோக்கியதாகவே உள்ளது. இதுவொரு பாரதூரமான செயற்பாடாகும். நான் ஆளும் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஒருவன் எனது மக்களைப்பற்றி சதா சிந்திக்கின்றவன் என்ற வகையில் இச் சம்பவங்கள் எனக்கு மிகவும் மன வேதனையை தருகின்றது.
எவராவது கட்டுகின்ற அல்லது எந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கட்டிக் கொடுக்கின்ற கட்டிடங்களை திறப்பதற்காக கல்முனைக்கு வந்து போகின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காலமிருந்து கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவராக நிதியினை கொண்டு வந்து ஏதாவது அபிவிருத்தியினை மேற்கொண்டுள்ளார் என சரியான முறையில் உறுதிப்படுத்தினால் கல்முனை மாநகரசபை பதவியினை அடுத்த கணமே ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன். என்று குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top