ஜவாத்,ஜெமீல் அறிவிப்பு 

கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார்.
"நான் அறிந்த வரையில் ஆளுநரிடம் 350 மில்லியன் ரூபா செலவு செய்யுமளவுக்கு பணமில்லை. அப்படியான அபிவிருத்தி வேலைகளை செய்வதாயின் கிழக்கு மாகாண சபையின் நிதியிலிருந்து பெற்று தான் செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
"அவ்வாறு மேற்கொள்வதாயின் மாகாண சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வாறான எந்த நிதியும் கிழக்கு மாகாண சபையிலிருந்து கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்படவில்லை" எனவும் ஜவாத் தெரிவித்தார்.
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பெப்ரவரி 21ஆம் திகதி கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.
இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத் மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் பின்னணியில் செயற்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்ஷான், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.முபீத்  ஆகியோர்  குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், ஏ.எம்.ஜெமீல் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணை தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீட ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ஜவாத்,
"கிழக்கு மாகாண ஆளுநர் கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதை கேள்வியுற்று மகிழ்ச்சி அடைந்தோம்.
ஆனால், ஆளுநரின் கல்முனை விஜயம் தடைப்பட்டமைக்கு நாங்கள் தான் காரணம் என எங்கள் மீதும், கட்சி மீதும் அவதூறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆளுநரின் வருகை தடுக்கப்பட்டதன் மூலம் கல்முனை மாநகர  அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவிருந்த 350 மில்லியன் ரூபாய் இல்லாது போய் விட்டது என சிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஆளுநரினால் ஒரு போதும் இவ்வளவான பெரிய நிதியொதுக்கீட்டினை மேற்கொள்ள முடியாது. கிழக்கு மாகாண சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமே இந்த நிதியினை மேற்கொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறான எதுவும் கிழக்கு மாகாண சபையினால் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்படவில்லை. அத்துடன், கல்முனை மாநகர சபையில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முறையிட்டிருந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நான், மகாண சபை உறுப்பினர் ஜெமீல், கல்முனை மேயர் சிராஸ் மீராஸாஹிப்,  பிரதி மேயர் நிஸாம் காரியப்பர், எதிர்க்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கல்ந்துகொண்டனர்.
கல்முனை பஸ் நிலைய கடைகள் மற்றும் சாப்பு சட்ட நடை தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
முஸ்லிம்களும் தமிழர்களும் இடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது பேசி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய அவசியம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்போது கூறினார்.
இதனையடுத்தே ஆளுநரின் விஜயம் இடைநிறுத்தப்பட்டது. எனினும் குறித்த கலந்துரையாடலில் ஆளநரின் வருகையை நிறுத்துவாற்கு தலைவரோ அல்லது நாமோ காரணம் என யாரும் குறிப்பிடவில்லை.
ஆளுனர் என்பவர் நியாயமான ஒரு மனிதர். அவரை யாரும் சந்தித்து பேசலாம். அடுத்த கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நானும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் கல்முனைக்கு கிழக்கு மாகாண ஆளுநரை அழைத்து வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனை மேயரின் அனுமதியுடன் மேற்கொள்ளவுள்ளோம்" என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்,
"கிழக்கு மாகாண ஆளுரின் விஜயத்தை இடை நிறுத்தியமைக்கு நானும் ஒரு காரணம் என நிரூபித்தால் இன்றே நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன்.
கல்முனை பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் நாகரிகமற்ற அரசியலை கண்டு வெட்கப்படுகிறேன். ஏனெனில் இந்த  பிரதேசத்தின் அபிவிருத்தியை ஒற்றுமையுடன் செய்ய வேண்டிய நாங்கள் பொய்யான கட்டுக் கதைகளை எங்களுக்குள் முடுக்கி விடுகின்றோம்.
இவ்வாறான நடவடிக்கைகளால் எங்களது அரசியல் முன்னெடுப்புக்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனது அரசியல் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவே சிலர் இவ்வாறு மேற்கொள்கின்றனர்.
நாங்கள் பருவகால அரசியல் செய்பவர்கள் அல்ல. அரசியல் விடுதலை அமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸை உணர்வு ரீதியாக இச்சமூகத்தில் முன்னிறுத்த வேண்டும் என அரசியலில் இணைந்து கொண்டவர்கள். கல்முனை பஸ் நிலைய கடைகளை திறப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் வருகை தரவிருந்தார்.
ஆனால் இந்நிகழ்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  தலைவருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறினர். கல்முனையில் கறுப்பு கொடி காட்டப்பட்டால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காட்டப்பட்ட கறுப்புக் கொடியாகவே தேசிய ரீதியில் சித்தரிக்கப்படும்.
இதன் மூலம் கட்சியை ஓரங்கட்டவைக்கும் செயலாகவே இதை நாங்கள் கருதினோம். இது தவிர எந்தக் காரணமும் இல்லை.
கல்முனை பிரதேச அபிவிருத்திக்காக யார் செயற்பட முன் வந்த போதும் நாங்கள் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. இனியும் இருக்கபோவதில்லை. இதற்கு கடந்த கால நிகழ்வுகள் பல சான்றாகும்" என்றார்.

கருத்துரையிடுக

 
Top