எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை?

TNA - SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை!

இவர்களா அரசாங்கத்துடன் பேசி தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறார்கள் ?

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இதுவரை தமக்கிடையே ஒரு நிலையான நிலைப்பாட்டிற்கோ அல்லது ஒரு இறுதியான தீர்மானத்திற்கோ வரமுடியாத நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தை எவ்வாறு ஒரு முடிவிற்கு வரமுடியும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் அல்லது தமிழ்பேசும் மக்கள் வாழ்வதாகக் கூறும் வடக்கு, கிழக்கு மாகாணங் களில் இப்போது ஒன்றாக வாழ்ந்துவரும், எதிர்காலத்திலும் வாழப்போகும் ஒரே மொழி பேசும் இரு இனச் சகோதரர்களால் தமக்கிடையே ஒரு நிலைப்பாட்டிற்கு வரமுடி யாமலிருப்பது மக்களுக்கு வேதனையளிப்பதுடன் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்கையில் ஐம்பது வருடங்களாக அரசியல் ரீதியாக முரண்பட்ட நிலையிலும், முப்பது வருடங்களாக ஆயுத ரீதியாக பிளவுபட்டிருந்த நிலையிலும் தமிழ்த் தரப்பு அரசாங்கத்துடன் எவ்வாறு பேச்சுவார்த்தை மூலமாக உடனடித் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
தீர்வு காணும் விடயத்தில் தமக்கிடையே நடத்தப்படும் பேச்சுக்களில் காலத்தை இழுத்தடித்து வருவது தமிழ்த் தரப்பா அல்லது முஸ்லிம் தரப்பா என்பதையும், வேண்டுமென்றே இவ்வாறு நடந்து கொள்கிறார்களா என்பதையும் முதலில் கண்டு பிடித்து அதற்கான பின்னணி என்ன என்பதை ஆராயாது விட்டால் அரசுடனான பேச்சும் இழுபட்டுக் கொண்டு தான் செல்லும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இடையிடையே இவ்விரு தரப்பும் மிகவும் ஐக்கியப்பட்டு உடன்பிறந்த சகோதரர்கள் போன்று அறிக்கை விடுவதும் பின்னர் சிறிது காலத்தில் ஒரு தரப்பை மற்றத் தரப்பு விமர்சித்து எதிரிகள் போல அறிக்கை விடுவதும் மக்களை ஏமாற்றவா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
உள்நாட்டில் தவறை வைத்துக் கொண்டு வெளிநாடுகளிடம் உதவி கேட்பதில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. முதலில் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் தமக்கிடையே ஒரு உடன்பாட்டிற்கு வந்து அதனை அரசிடம் எடுத்துரைத்து விரைவான தீர்வைக் காண முன்வர வேண்டும் என்பதே மக்களது விருப்பமாக உள்ளது.

கருத்துரையிடுக

 
Top