கல்முனை மாநகர சபை பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்க விளையாட்டு மைதானத்தில் மாநகர சபை பிரிவில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டப்படுவதால் பொது மக்களும் விளையாட்டு வீரர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பிரதேச விளையாட்டுக் கழகங்கள் விசனம் தெரிவிக்கின்றன.இதுவரை பூர்த்தி செய்யப்படாதுள்ள இவ்விளையாட்டு மைதானத்தில் இவ்வாறு குப்பை கூழங்கள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் உட்பட கழிவுகள் கொட்டப்படுவதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாது போயுள்ளதுடன் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மிகுந்த சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அக்கழகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை இதிலிருந்து வெளியேறும் தூர்நாற்றத்தினால் அருகிலுள்ள பாடசாலை மாணவர்களும் மார்கக் கடமைக்காக பள்ளிவாசல் செல்லும் பொதுமக்களும் தமது கல்வியையும் மார்க்க கடமைகளையும் முறையாக மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு முற்றுப்பெறாமல் இன்னும் அரைகுறையாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல்வேறு தகாத குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நற்பிட்டிமுனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கல்முனை மாநகர சபையில் மூன்று கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதிநிதிகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையினால் இம்மூவரும் ஒன்றிணைத்து நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்க விளையாட்டு மைதானத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


கருத்துரையிடுக

 
Top