கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 178 குடும்பங்களுக்கு மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததில் பாதிக்கப்பட்ட மருதமுனை பிரதேசத்தில் 178 குடும்பங்களுக்கு இன்று 7 வருடங்களாகியும் வீடுகள்; வழங்கப்படாதுள்ளன. இவர்களுக்காக மேட்டுவட்டை பிரதேசத்தில் அரசாங்கத்தினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை கையளிக்கப்படாத நிலையில் உள்ளன. 

அத்துடன், இவ்வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எவையும் செய்யப்படாது பூட்டிய நிலையில் இவ்வீடுகள் உள்ளன. வீடுகள் உள்ளபோதிலும் அவற்றில் குடியிருக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தருமாறு கோரி கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, பிரதேச செயலாளர் எம்.எம்.நெவ்பல் இது குறித்து அரசாங்க அதிபரின் கவனத்திற்கு
கொண்டுவந்தார். 

இந்நிலையில், எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மேற்படி வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 

கருத்துரையிடுக

 
Top