இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக பொலிஸ் திணைக்களத்தினால், அகில இலங்கை ரீதியாக சிவில் பாதுகாப்புக் குழு அணிகளுக்கிடையே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொலிஸ் கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் மாவட்ட அணியினரை தெரிவு செய்யும் போட்டிகள் தற்பொழுது அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வருகின்றன.
மேற்படி சுற்றுப் போட்டியின் ஒரு பிரிவாக அம்பாறை மாவட்ட அணியினரை தெரிவு செய்யும் போட்டிகளின், அரை இறுதிப் போட்டிகள் கடந்த புதன்கிழமை, கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
மு.ப. 10.00 மணிக்கு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்புக் குழு அணியினர், தன்னை எதிர்கொண்ட திருக்கோவில் பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழு அணியினரை (02-01) கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டனர்.
பி.ப. 04.00 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட கல்முனை பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்புக்குழு அணியினர் தன்னை எதிர்த்து ஆடிய மத்திய முகாம் குழுவினரை (6-−0) கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு அம்பாறை மாவட்ட சம்பியன் அணியினராக தெரிவாகி அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. ஏ. கப்பார் தலைமையில் நடைபெற்ற மேற்படி போட்டிகளின்போது பிரதம அதிதியாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி. ரி. டி. ஹேமந்த, சிறப்பு அதிதிகளாக மருதமுனையின் தொழில் அதிபர் ஏ. எம். றியாஸ், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ. எம். இப்றாகிம், கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ. எல். ஏ. வாஹித் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top